Published On: Thursday, August 27, 2015
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவான தீர்மானம்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் கொண்டுவரவிருப்பதாக அமெரிக்கா கூறியிருப்பதைக் கண்டித்து செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது போர்க்குற்றங்கள் அல்ல, தமிழ் இனப்படுகொலை என்பதுதான் சரியான நிலைப்பாடு ஆகும். இருந்தபோதிலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக நாடுகளின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைவதற்கே ராஜபக்சே அரசு அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்குள் நுழைவதற்கும் நரேந்திர மோடி அரசும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், இலங்லை அதிபர் தேர்தலில் அமெரிக்க அரசின் ஏற்பாட்டின் பேரில், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனாவும், ஐக்கிய தேசிய கட்சியின் ரனில் விக்ரமசிங்கேவும் கூட்டணி அமைத்துக் கொண்டனர். மைத்திரிபால சிறிசேனா அதிபராக வெற்றி பெற்றார். அமெரிக்க அரசின் யோசனைப்படிதான் ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து இலங்கை தேசிய அரசு அமைத்துள்ளது. 1948க்குப் பின் முதன்முதலாக இப்போதுதான் இப்படி ஒரு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழர்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகடைக்காய் ஆக்கப்பட்டுவிட்டது. இனி, தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேறாது; வடக்கு, கிழக்கு இணைப்பு நடக்காது; இனப்படுகொலை விசாரணையை உலக நாடுகள் நடத்தாது.
அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப்படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார சிங்கள அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்ததுதான். இதை, தற்போது இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் தெரிவித்து உள்ளார். சிங்கள அரசின் ஆலோசனையின்படிதான் ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தைத் தாக்கல் செய்வோம் என்றும் கூறி விட்டார்.
அமெரிக்க அரசின் இந்த செயலைக் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று செவ்வாய் கிழமை காலை 10 மணி அளவில், சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு எதிரே என்னுடைய தலைமையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகக் கண்மணிகளும், ஈழத்தமிழ் உணர்வாளர்களும் ஆர்ப்பரித்து அறப்போரில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
(திருச்சி - சாகுல் ஹமீட்)