Published On: Thursday, September 10, 2015
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தில் நாபீர் பௌன்டேசன் களமிறங்கும்
நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தின் மூலை முடுக்கெங்கும் தனது சமூக சேவைப் பணிகளை செய்து வரும் நிர்மாண முகாமைத்துவ முதுமாணி அல் ஹாஜ் யூ.கே.நாபீர் தலைமையிலான நாபீர் பௌன்டேசன், அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தான் ஈடுபட்ட சமூக சேவைகளின் ஊடாக அவ்வப்பிரதேச மக்களையும் அமைப்பு ரீதியாக ஒன்றிணைத்து தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
நாபீர் பௌன்டேசன் மேற்கொண்டுவரும், மக்களுக்காக மக்களுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் பணிகளை இன்னும் விரிவு படுத்தும் நோக்கில் கடந்த பொதுத்தேர்தலில் களமிறங்க திட்டமிட்டிருந்த போதிலும் பிரதேசத்தின் முஸ்லிம் பிரதிநிதிதத்துவத்தை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டது.
நாபீர் பௌன்டேசன் எதிர்பார்த்த மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிசபை உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் நிர்மாண முகாமைத்துவ முதுமாணி அல் ஹாஜ் யூ.கே.நாபீர் தலைமையிலான நாபீர் பௌன்டேசன் களமிறங்க திட்டமிட்டுள்ள அதேவேளை குறித்த தேர்தல்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் உள்ள கல்முனை அக்கரைப்பற்று மாநகரசபை உள்ளிட்ட அனைத்து சபைகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவுள்ள நாபீர் பௌன்டேசன்இ குறித்த தேர்தல்களில் தனித்துத் போட்டியிடுவதா? அல்லது வேறு கட்சியில் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் தனது அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்களுடனும் பிரதேச புத்திஜீவிகளுடனும் கலந்துரையாடி வருவதாக நாபீர் பௌன்டேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.வை.அமீர் -