Published On: Tuesday, September 15, 2015
விளையாட்டு நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும்
கோட்டைக்கல்லாறு பிரன்சிப் விளையாட்டுக் கழகத்தின் 19வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கழக தலைவர் செ.செல்வபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாளேந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், ஓய்வு பெற்ற கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.பாக்கியராசா மற்றும் கிராம அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வரவேற்பு நடனம், சங்கீத நடனம், சிறுவர்களுக்கான இனிப்புப்பை ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், அலங்காரப் பானை உடைத்தல், ஓட்டம், பெண்களுக்கான வனிஸ் சாப்பிடுதல், பெண்களுக்கான வலூன் ஊதி உடைத்தல், கரண்டியால் தேசிக்காய் கொண்டு போதல், கிடுகு இளைத்தல், தேங்காய் திருவுதல், சூப்பியில் பானம் அருந்துதல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், யானைக்கு கண் வைத்தல், வினோத உடை, தலையணைச் சமர் உட்பட்ட பல விளையாட்டுக் நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது ஐந்தாம் தர புலமைப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சை என்பவற்றில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாளேந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் ஆகியோருக்கு கழகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இக்கழகத்தின் பொது மைதானம் சீரின்மை காணப்படுவதாக கழகத்தினர் தெரிவித்தமையை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் மைதானத்தினை பார்வையிட்டு இதனை சீர்செய்வதற்கு உறுதி வழங்கியதுடன், ஏனையவர்களும் உறுதி வழங்கி இருந்தனர்.
(வாழைச்சேனை நிருபர்)