Published On: Wednesday, September 09, 2015
வேளாண்மைச் செய்கை விவசாயிகளை அறிவுறுத்தும் கூட்டத்தில் அமைதியின்மை
மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேசத்திற்கான பெரும்போக நெல் வேளாண்மைச் செய்கை விவசாயிகளை அறிவுறுத்தும் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
2015 - 16 ஆண்டிற்கான விஷேட கூட்டம் செங்கலடி பிரதேச செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நேற்று 08.09.2015 மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொள்ளாவிட்டால் ஆக்கபூர்வமான முடிவுகள் எதனையும் எடுக்க முடியாது, மேலும் எடுக்கப்படும் தீர்மானங்களை அமுல்படுத்த முடியாதநிலை ஏற்படும் எனத் தெரிவித்து விவசாயிகளில் ஒரு பகுதியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் பங்கேற்க முடியுமான தினம்வரை கூட்டத்தை ஒத்திவைக்கும்படி இவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
குறிப்பாக மாவடிஓடை பாலத்திற்கருகிலான பாதைப் புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்மைக்கு விவசாயிகள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
மேலும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள மேய்ச்சல் தரைப் பிரச்சினை, பெரும்பான்மையினரின் அத்துமீறிய செயற்பாடு மற்றும் காட்டு யானைத் தொல்லை போன்ற பிரச்சினைகளுக்கு உரிய உத்தரவாதத்தை வழங்குவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கூட்டத்திற்குச் சமுகமளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.
இக்கூட்டத்திற்கு தலைமைவகித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் இதுகுறித்துக் கேட்டபோது-- மாவட்ட அரசாங்க அதிபர் வெளிஇடமொன்றிற்கு பயணம் செய்துவிட்டார். தற்போது அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. அதேநேரம் விவசாயிகள் அறிவுறுத்தல் கூட்டத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமுகமளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றார்.
எனினும் எஞ்சிய விவசாயிகளைக் கொண்டு கூட்டத்தை தொடர்ந்து நடாத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)