எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 18, 2013

முஸ்லிம்களின் வாயில் ஒட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் முத்திரை

Print Friendly and PDF


இலங்கையில் யுத்த நடவடிக்கை முடிவுற்றதற்குப் பின்னர் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும், யுத்தத்தில் நேரடியாக கலந்து உயிரையும், உடமைகளையும் இழந்த சிங்கள மக்களுக்குக்கும் இடையில் தன்வயிறை நிறைத்துக் கொண்டு நாட்டின் நகரங்களில் நன்றாக உடுத்துக் கொண்டும், வியாபாரம் செய்து கொண்டும் சுகம் அனுபவிக்கும் முஸ்லிம்களை இந்நாட்டின் ஆட்சியாளர் தொடக்கம் பொதுபலசேனா போன்றோர் கண்டுகொண்டனர். இவ்வாறு ஆடம்பரமாகவும், அதிக சம்பாத்தியத்தை பெற்றுக் கொண்டும், உலாவரும் முஸ்லீம்களின் அடிப்படைவாத்தில் கைவைத்தால் மாத்திரமே அவர்களை ஆட்டங்காணச் செய்யலாம் என்பதை நன்கு திட்டமிட்டு நீண்டகால அடிப்படையில் சிந்தித்து செயலாற்றிய ஒரு சமாச்சாரம்தான் இந்த ஹலால் விவகாரம் ஆகும். 

பொதுவாக முஸ்லிம்கள் கட்சி அரசியல் ரீதியாக ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு மந்திரி, பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு தூதுவர் போன்ற பதவி பட்டங்களைக் கொடுத்தால் மனிதர் ஆடிப்போய் விடுவார் என்று நன்றாகத் தெரிந்து கொண்ட பேரினவாதிகள் மிகச் சுலபமாக இந்நாட்டு வாழ் இலட்சோப லட்ச முஸ்லீம்களின் வாயிலும், வயிற்றிலும் அடித்துவிட்டார்கள். ஒருவகையில் இது பொதுபலசேனாவுக்கு வெற்றியாக அமைந்தாலும் இது முஸ்லீம்கள் வரலாற்றில் ஏற்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை போல நினைத்து கொள்வதாக சிலர் கூறினாலும் இந்நாட்டு முஸ்லீம் தலைமைகள் மாபெரும் தவறைச் செய்துவிட்டார்கள்.

இதற்குப் பிறகு வரப்போகும் இன்னும்பல ஓட்டைகளுக்கு இச்சம்பவம் ஆரம்பமாகவே அமைந்துள்ளன என்பதை ஒத்துக் கொள்ளவும் வேண்டும். இந்த பழிபாவமெல்லாம் இந்நாட்டு முஸ்லீம்களை வழிநடாத்துகின்ற முஸ்லீம் தலைமைகளும், அரசுடன் ஒட்டிக் கெண்டுள்ள ஒட்டாளர்களும், மதரீதியான தலைவர்களும்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதை இனிவரும் சமூகத்திற்கும் பதிவாகிவிட்டது. “தான் ஆடவில்லை தன்தசையாடு” என்பதுபோல ஒவ்வொரு முஸ்லீமினதும் தசையை ஆட்டிவிட்ட இச்சம்பவம் இனங்களுக்கிடையிலான ஒரு மாபெரும் விரிசலுக்கு அடிவகுத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்

நீண்டகாலம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இவ்விடயம் என்பதை பொதுபலசேனாவின் தலைவரே அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்நாட்டில் முஸ்லீம்கள் மீதான தாக்குல் காலத்திற்குக்காலம் பேரினவாதிகளால் ஏற்படுத்தி வந்த வரலாறுகள்தான் அதிகம். 1915இல் கம்பளையில் ஆரம்பித்த முஸ்லீம் சிங்களக் கலவரம் பலகொலைகளிலும், பொருளாதார ரீதியான முடக்கங்கள் முறிவடைந்த நிலைமையிலும்தான் முடிவடைந்தன. அதன் பின்னர் பலபோராட்டங்கள், பலவிரிசல்கள், ஆர்பாட்டங்கள், குழிபறிப்புக்கள் என்று ஏகப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் அம்பாறை மாவட்டத்தை முழுமையாக பேரினவாதிகளின் கைகளில் சிக்கவைக்க பல துரும்புகள். அதில் ஒன்று டிஎஸ். சேனநாயக்கா வின் சேனநாயக்க குளமும் அதன்பின்னர் அம்பாரை நகர ஆரம்பமும் வளர்ச்சியும் இன்று தயட்டகிருள கொண்டாடப்படுகின்றது. 

இக் கிருள ஊடாக உண்மையிலேயே அம்பாரை மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு எந்தவித்திலும் எதுவும் ஆகவில்லை. “அம்பாறை கிருள” போன்று அனைத்தும் அம்பாரைக்கே அள்ளிவழங்கப்பட்டு எதிர்வரும் 23ஆந்திகதி திறக்கப்படுகின்றது. முஸ்லீம்கள் வாய்திறக்கக்கூடாது என்பதற்காகவே பொதுபலசேனா எனும் பெயரிலான முத்திரை இந்நாட்டின் முஸ்லீம்களின் வாயில் ஒட்டப்பட்டுவிட்டது. நாம் தருவதைத்தான் உண்ணவேண்டும். வெளிநாட்டுக்கு மட்டும் உங்களது ஹலால் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். இது என்னய்யா நியாயம்! இறைவன்தான் பாதுகாக்க வேண்டும். என்று இரவும் பகலும் ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்கின்றனர் முஸ்லீம்கள்.

அரசும் அரசுடன் ஒட்டிக் கொண்டவர்களும், அரசுக்குரியவர்களும் செய்கின்ற கைங்கரியங்களை ஏன் இந்த முஸ்லீம் உலகம் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க அந்த முஸ்லீம்களுக்குள்ளே இருக்கின்ற ஒருசிலர் தம் பதவிகளுக்காக அரசின் காலில் விழவும் துணிந்துவிட்ட நிலைமையில், இப்படித்தான் முடியும் என்று எதிர்பார்த்த மாதிரி ஆட்டம் முடிவடைந்துவிட்டது. அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வதற்கு முன்னராவது இந்த தலைமைகள் சிந்தனைக்கும், உலகளாவிய முஸ்லீம் உம்மாவுக்கும் தெரியப்படுத்த வேண்டிய விடயங்களை உடன் தெரியப்படுத்துவதிலாவது பின்நிற்கக் கூடாது என்பதே நமது அவா!

தற்போது நடைபெறுகின்ற உலகமனித உரிமைகள் பேரவையின் கூட்டம் கடந்தாண்டில் நடைபெற்றபோது இந்த உலமா சபையினர் ஒற்றைக் காலில் நின்று இங்குள்ள உண்மையான நிலவரத்தை மறைத்து பொய்யான நிலவரத்தை கூறினர். அதற்குத் தண்டமாக இந்த ஹலால் சான்றிதழ் பறிபோனது என்கின்றார் நமது நண்பர் ஒருவர். மேலும், தொப்பி அணிந்தவர்கள் அதுவும் முஸ்லீம்கள் மதப்பெரியார்கள் கூறுகின்றனர் என்று நினைத்து அறாபிய நாடுகள் அனைத்தும் நம்பிக்கை கொண்டனர்.

அதேபோன்ற ஒரு காலத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்ற நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முயற்சிக்கின்ற உலக மகா சபையின் அமர்வு நடைபெறும்போதே ஒருநாட்டில் வாழும் முக்கிய ஒரு சமூகத்திற்கு எதிராக அதுவும் அவர்களது மதரீதியான அடிப்படைவாதத்தில் கைவைத்துள்ள பேரினவாதிகளுக்கு சார்பாக இந்நாட்டுவாழ் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகமும் குரல் கொடுக்கவேண்டிய தருனத்தை மறந்து சமூகம் அரசியல் இலாபம் என்றும், இதனை அவர் பார்க்கட்டும், எனது அமைச்சர் பதவிதான் முக்கியம் என்றும், எனது உலமா பட்டம் பறிபோய்விடும் என்றும் நினைக்கின்ற ஒரு சமுதாயத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறேம் என்பதை நினைக்கின்றபோது கடுமையான உளக்கவலை ஏற்படுகின்றது என்றும் அந்த நண்பர் தெரிவித்திருந்தமை நினைவிற்கொள்ளத் தக்கது. 

தம்புள்ள பள்ளியில் ஆரம்பித்த புனிதப்பிரதேச எல்லைப் பிரச்சினை, பொத்துவில் கௌதமபுத்தர் சிலை வைத்தல் விவகாரம், ஒலுவில் தீகவாபி பிரச்சினை, நாடுமுழுவதிலும் உள்ள பல பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமை, சிதைக்கப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை, அம்பாரை மாவட்டத்தை சிங்கள மயப்படுத்துவதற்காக அதன் எல்லைகளை மீளவும் வியாபகப்படுத்தப்பட்மை, சிங்கள மொழியிலான தேசிய கீதம், மொழிப்பிரச்சினை, தமிழ் மொழியில் எழுத்துக்களை வேண்டுமென்றே பிழையாக எழுதி தமிழ்பேசும் மக்களை குறிப்பாக முஸ்லீம்களை ஆத்திரமூட்டியமை, பள்ளிகளில் சப்தமிட்டு பாங்கு சொல்வது, குட்டக்குட்ட குனிந்து நடக்கும் ஆரசியல் பித்தலாட்டங்களில் கண்மண்தெரியாது உள்ளே பௌத்தர்களின் மடாலயங்களுக்குக்குள் தஞ்சமடைந்து கொண்ட முஸ்லீம் பெயரிலான சிறுமைவாதிகளின் சரசங்கள் என்பன, பலதப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் கொள்கைகளுடன் இருப்பதும் மேலும் மேலும் பேரினவாதிகளின் அட்டகாசங்கள் எப்படி முடிவுறும். 

அண்மையில் பிரசன்னா இந்திரகுமார் என்கிற கிழக்கு மாகாண சபையின் அங்கத்தவர் பேட்டி ஒன்றின்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் சிந்திக்க வேண்டியதாகும். அதாவது “இந்நாட்டின் அரசு வீதிகளையும், கட்டிடங்களையும் அபிவிருத்தி செய்தால் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று நம்புகின்றது. ஆனால் இனங்களிடையே மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தி முரண்பாடுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. அந்த அபிவிருத்தியினால் எவ்வித பிரயோசனமும் இல்லை. இலங்கை விவகாரம் முற்றிப் பழுத்துள்ள நிலையில் முஸ்லீம்களும், இந்துக்களும் மதஉரிமைகளுக்காக போராடுகின்றனர். எமது தாயகப் பூமியில் முஸ்லீம், இந்து, கிறிஸ்தவ இல்லங்கள் தாக்கி அழிக்கப்பட்டு பௌத்த மதத்தினர் இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் எழுப்படுகின்றன. அன்று இவற்றையெல்லாம் நாம் இரு இனத்தாரும் ஒன்றுசேர்ந்து கிழக்கிலாவது முறியடிப்போம் ஒத்து வாருங்கள் என்று முஸ்லீம்களை கோரியபோது அவர்கள் ஒத்துவரவில்லை. தமிழ்தேசியக்கூட்டமைப்பு தனித்தோ, கூட்டாகவோ ஆட்சியை கைப்பற்றியிருந்தால் இந்நிலைமைக்கு முடிவுகட்டியிருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். 

வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு மாத்திரம் ஹலாலை வழங்கிவிட்டு உள்நாட்டு முஸ்லீம்களின் கன்னத்தில் அறைந்துள்ளமை இந்நாட்டு முஸ்லீம்களுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது என்று மனோ கணேசன் தெரிவித்திருந்த கருத்தையும் நாம் ஆழமாகக நோக்க வேண்டியுள்ளது. இலவச ஹலால் முத்திரைகளை ஏற்றுமதிப் பொருட்களுக்கு மாத்திரம் வழங்குவதன் ஊடாக உலமாசபையினர் ஹலால் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிட்டனர் என்று அரசு கூறினாலும் இது முஸ்லீம் சமூகத்தின் மதரீதியான நடவடிக்கை. இதற்கு அவர்களே தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும். அதேவேளை வெகுவிரைவில் முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தா தொடர்பிலும் பேரினவாதிகளின் புதிய எதிர்ப்புக்கோஷங்களையும் எதிர்நோக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாகவும் மனோகணேசன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். இதனையும் இன்றைய நாட்களில் முஸ்லீம் சமூகம் பேசாமடந்தையாக இருக்ககத்தான் வேண்டுமா?

பாமர முஸ்லீம்கள் தங்களது வாழ்க்கை முழுவதும் ஹலால் ஹறாம் என்கிற மத அனுஷ்டானத்தை முழுமையாக பின்பற்றி வந்தவர்கள். தானுண்டு, தன் தொழில் உண்டு என்று மார்க்கத்தை நபிவழியில் தன்னைப் படைத்த இறைவன் பக்கம் ஐவேளை தொழுது முறையாக வாழ்ந்தவர்களுக்கு இன்று நம்பிக்கை துரோகம் செய்யும் அளவுக்கு முஸ்லீம்கள் செய்த பாவம்தான் என்ன? அரசில் பங்கு கேட்டார்களா? தொழில் துறைகளில் அதிக இலாப பங்குதான் கேட்டார்களா? நாட்டைப் பிரித்து கேட்டார்களா? நன்றாக உழைத்து நாலுபணம் சம்பாதிக்கின்ற நிலைமையை இந்நாட்டு முஸ்லீம்கள் கைக் கொண்டுள்ளனர். இறைச்சியை உண்டு புசிக்கின்றனர். நன்றாக மாடிவீடுகள் கட்டுகின்றனர். அழகான உடைகள் உடுக்கின்றனர். இவர்கள் மீது பெறாமை கொண்டதன் காரணமாக குருநாகல போன்ற பிரதேசங்களிலும், குக்கிரமாங்களிலும், நகரங்களிலும் வாழுகின்ற முஸ்லீம்களை துரத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென இந்த பொதுப்பலசேனா வினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இனியும் பொறுத்தது போதும் பொங்கியெழவேண்டிய காலகட்டத்தில் இலங்கை முஸ்லீம்கள் விழித்தெழும் காலம் நெருங்கிவிட்டது. என்பதை முஸ்லீம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். எங்கோ நடக்கும் ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு சார்பாக தொழுகையில் துஆவும், அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள வேண்டுமென அரசியல் தலைமையில் கட்சிக்குக் கட்சியாக ஒவ்வொரு கிராமங்களிலும் எதிர்ப்பலைகள் அள்ளிவீசியதை இந்த முஸ்லீம் சமூகம் மறந்து விட்டதா? அதனைக் கூறியவர்களும் மறந்து விட்டார்களா? அல்லது இதுதான் நமது தலைவிதி என்று அனைத்தையும் இழந்து ஒட்டாண்டியாகிப்போவதுதான் முடிவா? என்பதையும் சிந்திக்கும் காலம் நம்முன்னே வந்துள்ளது. 

“ஒரு சிறு குழுவின் நடவடிக்கையினால் இந்நாட்டுவாழ் முஸ்லீம் சமூகத்தின் மத உரிமை முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபையின் அறிக்கையும் முஸ்லீம்களை கவலையடையச் செய்துள்ளது. இந்த ஒருபக்கச் சார்பான ஹலால் தீர்மானத்தை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது கடும்போக்காளர்களின் கட்டாயத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகத்தான் இது இருக்கவேண்டும்” என்று மட்டக்களப்பு மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர் றம்ழான் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமா என்ன? சில சிங்களப் பிரதேசங்களில் மிகக் கடுமையான முறையில் சிங்களப் பேரினவாதிகள் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒன்று மஹாஓயா பிரதேசத்தில் விநியோகிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சத்தாதிஸ்ஸ மன்னனின் தியாகத்தால் நிர்மானிக்கப்பட்ட இந்நகரத்தை மரக்கள முஸ்லீம்கள் கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நாட்டை ஆட்சி செய்யும் ஆசை இருந்திருந்தால் இந்திய மொகலாய சாம்ராஜ்ஜியத்தையே விட்டுக்கொடுத்த முஸ்லீம்களுக்கு அன்று இந்த இலங்கை வெறும் தூசு. இந்நாட்டை பிடித்து ஆட்சி செய்ய வேண்டுமென்ற எந்த ஆசையும் குறிப்பாக முஸ்லீம்களிடத்தில் இல்லை. தற்போதைய பிரிவினைகளும், பிரித்தாளும் தந்திரங்களும், மதரீதியான பிளவுகளும் ஏற்பட்டபோதுதான் இலங்கையின் தென்கிழக்கு அலகு என்கிற வாதம் வெளிப்பட்டதே தவிர அதுவும் தனிநாட்டுக்கான கோரிக்கையல்ல. 

எனவே, முஸ்லீம்கள் மீது தினிக்கப்பட்டுள்ள சட்டரீதியற்ற முறையிலான ஹலால் பிரச்சினைக்கு இந்நாட்டு முஸ்லீம் கட்சிகள் ஒன்றுமைப்பட்டு தற்போது ஜெனீவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகளுக்கான சமூகவிரோத நிலையிலுள்ள அரசியல் நிலைப்பாடுகளையும், உலக முஸ்லீம் நாடுகளிடம் இந்நாட்டு முஸ்லீம்களுக்கு கிடைத்துள்ள அநீதிகளையும் எடுத்தாள்வதிலிருந்து பின்நிற்கக்கூடாது. வெறுமனே தீர்மானம் எடுக்கப்பட்டதற்குப் பிறகு கொக்கரிக்கின்ற சில முஸ்லீம்கள் தாங்கள்தான் முஸ்லீம்களின் ஏகபிரதிநிதிகள் என்றெல்லாம் மக்களிடம் அரசியல் செய்வதை அண்மையில் சில வெப்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது. 

வாய்பொத்தி மௌனியாக இருந்துவிட்டு அரசியல் சாயம் பூசுகின்ற முஸ்லீம் தலைமைகள் உண்மையான தலைமைகளாக இருக்கவேண்டுமாக இருந்தால் எங்கே உதரித்தள்ளுங்கள் உங்களது அரை, முழு மந்திரிப் பதவிகளை. முடியாது!! நமது கிராமங்களிலுள்ள பள்ளிவாசல் தலைமைத்துவப் பிரச்சினையை தீர்க்க முடியாத முஸ்லீம்களால் எங்கே ஐயா நமது சமூகப் பிரச்சினையை தீர்க்கப்போகின்றோம்.

முதலில் எம்மிடையே ஒற்றுமையை வளர்த்தெடுப்போம். சமூக மற்றும் மார்க்க ரீதியான பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட துணிந்திடுவோம். ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடியுங்கள். நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் என்று நபியும், அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றபடி வாழ்வை நெறிப்படுத்துவோம். இறைவனிடம் இருகரமேந்தி தியானிப்போம். பொதுபல சேனாவின் அடாவடித்தனத்தை இறைவனிடம் பாரப்படுத்துவோம். முஸ்லீம்களின் வாய்களிலும், வயிற்றிலும் ஒட்டப்பட்டுள்ள முத்திரைகளை கிழித்தெறிய ஒன்றுபடுவதே இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகும்.

(கழுகுப்பார்வை)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2