Published On: Saturday, March 16, 2013
முஸ்லிம் திணைக்களத்துக்கு ஹலாலை ஒப்படையுங்கள்: அமைச்சரவை உப குழு

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்துக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி நியமித்த விஷேட அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது. பொறி முறையொன்றினை வகுப்பது தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை முன் வைப்பதற்கும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை மேற்கொள்ள ஜம்மியத்துல் உலமா சபைக்கு எந்தவித அதிகாரமும் கிடையாதென்றும் இக்குழு அதன் பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
ஹலால் உணவு உட்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையையும் இக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் 2007 இல் வழங்கப்பட்டிருந்த போதிலும் 2008 இல் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உலமா சபை இந்த விடயத்தில் தொடர்ந்தும் செயலாற்ற முடியாதென்றும் இக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான அமைச்சரவை உபகுழு இந்த முடிவுகளை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவுள்ளது.