Published On: Sunday, April 14, 2013
வடக்கிலுள்ள ஊடகங்களை தொடராக தாக்குவது யார்?
யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை தாக்கப்பட்டமை தொடர்பாக தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (SAFMA) இலங்கை கிளை விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
இனம்தெரியாத நபர்கள் மிகவும் மோசமான முறையில் வடக்கி்லுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கியுள்ளதுடன் அதன் அச்சகத்தும் தீவைத்துள்ளனர். தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பு (SAFMA) இதனை வன்மையாக கண்டிப்பதுடன், வடக்கில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு,இனந்தெரியாத நபர்கள் ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் தாக்கிவருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்நகரின் மத்தியில் இயங்கிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இருவாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சியிலுள்ள அதன் கிளை அலுவலகமும் தாக்கப்பட்டது. அப்பிரதேசத்தில்தான் வன்னியில் இராணுவத் தலைமையகமும் அமைந்துள்ளது. இத்தாக்குதலில் 3 பணியாளர்கள் காயத்துக்குள்ளானார்கள். மூத்த முகாமையாளர் ஒருவர் கடுமையான காயத்துக்குள்ளானார். இத்தாக்குதலில் கணனி உள்ளிட்ட பல பொருட்கள் அழிக்கப்பட்டன.
இதற்கு முன்னர் யாழில் வெளிவருகின்ற வலம்புரி மற்றும் யாழ். தினக்குரல் பத்திரிகைகளும் தாக்குதலுக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகள் எரிக்கப்படுதல், பத்திரிகை ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல், விநியோக வாகனம் தாக்கப்படுதல், விநியோகஸ்தர்கள் தாக்கப்படுதல் என வடக்கில் பத்திரிகைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன.
இந்த ஆண்டில் மட்டும் இருவாரங்களுக்கு ஒருமுறை வடக்கில் பத்திரிகைகள் தாக்கப்படுவதை அவதானிக்ககூடியதா உள்ளது. வடமாகாணம் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதனை வைத்துப்பார்க்கையில், சில அரசியல் சக்திகள் இந்த தமிழ் பத்திரிகைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. யுத்தத்தை கையாண்டு அதில் வெற்றிகண்ட பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த தாக்குதல்களை யார் நடாத்துகிறார்கள் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் முழு சமுதாயத்தையும் கோபத்துக்குள்ளாக்குவதுடன் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் என தெற்காசிய சுதத்திர ஊடக அமைப்பின் (SAFMA) இலங்கை கிளை விடுத்துள்ள அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
