Published On: Thursday, October 30, 2014
மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்டெடுக்க முடியாதநிலை
கொஸ்லந்தை, மீரியபெத்தையில் புதன்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டவர்களை மிட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிவாரணப் பணியிலீடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட லயன் வீடுகள் இருந்த இடம் 25 அடிக்குள் கீழ் சென்றுள்ளதனால் சடலங்களைத் தேடி டிடுப்பது கடினமாகவுள்ளதனால் தேடும் நடவடிக்கையை கைவிடும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வனர்த்தத்தினால் 57 குடும்பங்களின் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழன் மாலை வரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை நாலாகும். 10 சடலங்கள் மீட்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பிழையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்திலினால் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 192 ஆகும். இச்சம்பவம் காரணமாக சுமார் 70 பிள்ளைகள் தமது தாய், தந்தையர்களை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளைகளை உறவினர்களிடம் கையளிக்கும் வரை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்குமாறு சிறுவர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இம்மண் சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு இதுவரை என்ன நேர்ந்ததென்றே தெரியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன், தொடரும் மழையால் அவர்களை தேடும் பணிகள் முடக்கப்பட்டு வருகின்றது. அனர்த்தம் இடம்பெற்ற இடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான மூலம் சென்று பார்வையிட்டதுடன், அனர்த்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் கொஸ்லந்தை கணேஷா தமிழ் வித்தியாலயத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கையளித்ததுடன், அனர்த்தத்தில் சிக்குண்ட பிள்ளைகளை விரைவில் மீட்டெடுக்குமாறும், இவ்வனர்த்தத்தில் மேலும் பிள்ளைகள் பாதிக்கப்படாது அவர்களை உடன் போதிய பாதுகாப்பு வழங்குமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதியுடன் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் சென்றிருந்தார். இதேவேளை மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைக்கு தலா 15,000 ரூபாவை ஒதுக்கீடு செய்வதுடன், அந்நிதியை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரை மூவர் மண்ணுக்குள் சிக்குண்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணியில் காவற்துறையினருடன், படையினர் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்துள்ளனர். மழை காரணமாக இடைநடுவில் மீட்புப் பணிகள் கைவிடப்பட்டு, மழை ஓயந்தபின் மீண்டும் இப்பணிகள் தொடருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மண்ணுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேலும் தாமதிக்கப்பட்டுவருவதாகவும், அப்பகுதியில் தொடர்ந்தும் மண் சரிந்த வண்ணமுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடரும் அடை மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இம்மண்சரிவு அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து 300க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 1200 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜி. குமாரசிறி, அதற்காக மூன்று பிரதேச செயலாளர் பிரிவில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நுவரெலியா பிரதேச சபை பிரிவில் 104 குடும்பங்களும், லிப்பகல தோட்டத்திலிருந்து 150 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கொத்மலை வெலண்டன் தோட்டத்திலிருந்து 17 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், மேலும் 50 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதேச செயலாளர், வலப்பனை லிடெஸ்டெல் தோட்டத்திலுள்ள 17 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
