Published On: Thursday, August 13, 2015
முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு சகல முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
01. எமது செயல்களின் பெறுமானம் - அரசியல் செயற்பாடுகள் உட்பட - அவற்றை எந்தளவு தூரம் தூய்மையுடன் இறை திருப்தியை நாடி செய்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது. இந்தவகையில் அரசியல்வாதிகள் தமது அரசியல் பயணத்தில் பெயர் புகழ் பிரபல்யம் பதவி உலக சுகபோகங்கள் முதலான உளத்தூய்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புக்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்த நிலையில் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள முழுமுயற்சி செய்தல் வேண்டும். அப்போதே எமது அரசியல் சார்ந்த செயற்பாடுகள் எமக்கு நன்மை பெற்றுத்தரும்.
02. முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக வாழும் இந்நாட்டில் முஸ்லிம்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க முஸ்லிம் அரசியல்வாதிகள்ஒற்றுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
03. முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துவோர் தூய
எண்ணம் தக்வா அமானிதம் பேணுதல் தூரநோக்கு நீதி நேர்மை போன்ற உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட முன்மாதிரியானவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் தனது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக அரசியல் வாழ்க்கையிலும் இஸ்லாம் கூறும் ஹலால் - ஹராம் வரையறைகளைப் பேணுவதில் அரசியல்வாதிகள் விழிப்போடிருத்தல் வேண்டும்.
04. முஸ்லிம்களுக்கு எதிராக பல தீய சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் சுயலாபங்களுக்காக அரசியல் மேடைகளில் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்வதை நிறுத்தி கட்சி பேதங்களை ஓரங்கட்டி பிறரை கேவலப்படுத்துவதை தவிர்ந்து பொது இலக்குகளை நோக்கியும் பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் செயற்பட வேண்டும்.
05. அல்குர்ஆன் வசனங்களை பிழையாக மேற்கோள் காட்டுதல் அவற்றை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசியல் மேடைகளில் பயன்படுத்தல் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பள்ளிவாசல்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கோ அது சம்பந்தப்பட்ட விடயங்களுக்கோ பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும்
நேர்வழிகாட்டுவானாக.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர் - அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா.
(ஜுனைட்.எம்.பஹ்த் )
