Published On: Monday, August 10, 2015
என்று தணியும் எமது தண்ணீர் தாகம்?
என்று தணியும் எமது தண்ணீர் தாகம்? ஒன்று கூடுவோம் வாரீர் குரல் கொடுப்போம் தண்ணீர் தாகம் தீர்ப்போம் என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஒன்றியம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து உன்னிச்சை குளத்து முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த பிரதேச மக்கள் வரட்சியான காலத்தில் குளிப்பதற்காகவும், குடிப்பதற்காகவும் நீரை பெற்றுக் கொள்ள பல மைல் துரம் சென்று நீரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தங்களது அன்றாடத் நீர் தேவையினை நிறைவேற்ற பாதுகாப்பற்ற வீதி ஓரங்களில் குளிப்பதுமான ஒரு அவல நிலமை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை பல வருடகாலமாக குளத்தையும் வாய்க்கால்களையும் அண்மித்த இடங்களில் காணப்படும் பூவல் முறைமையில் குளிகளைத் தோண்டி மாசடைந்த நீரினையே குடித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வி;டயங்கள் தொடர்பாக மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிந்திருந்தும் தங்களுக்கான நீர் வசதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்துத் தர முன்வரவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகா குறித்த விடயம் தொடர்பாக அறிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு குறித்த விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மக்களிடம் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்