எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, December 21, 2015

1951 தமிழரசுக் கட்சி மாநாட்டில் முஸ்லிம்களின் சுய நிர்ணயம் தொடர்பான பிரேரணை நிறைவேற காரணமாக இருந்தவர் மசூர் மௌலானாவே!

Print Friendly and PDF

1951ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பில் தீர்க்கமான பிரேரணை ஒன்று நிறைவேற்றப்படுவதற்கு செனட்டர் மசூர் மௌலானாவே காரணமாக இருந்தார் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.







தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செனட்டர் மசூர் மௌலானாவை நியமிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், எம்மைப் பணித்திருந்த போதிலும் அவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்ததால் எம்மால் அதனை நிறைவேற்ற முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் செனட்டரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு தேசிய சுவடிகள் திணைக்கள கேட்போர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா இவற்றைக் குறிப்பிட்டார்.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"செனட்டர் மசூர் மௌலானாவுக்கு, பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுவதற்கான பல அரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவை வெற்றியளிக்காமல் போனமை துக்ககரமான நிகழ்வுகளாகும். அவாறான ஒரு துரதிருஷ்டம் தமிழரின் போராட்ட வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஒரு கால கட்டத்திலும் இடம்பெற்றிருந்தது.

அதாவது 2005 ஆம் ஆண்டு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி. பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கான பெயர்ப்பட்டியலை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சமர்ப்பித்தோம். அவர் அப்பட்டியலைப் பார்த்து விட்டு உடனடியாகவே சொன்னார், செனட்டர் மசூர் மௌலானாவை நியமியுங்கள் என்று மிகவும் உறுதியாகச் சொல்லி விட்டார்.

ஆனால் பிரபாகரனின் அனைத்து கட்டளைகளையும் நாம் ஏற்றுச் செயற்படவில்லை என்பதை மசூர் மௌலானாவின் விடயத்தில் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் தலைவர் சம்பந்தன் தலைமையில் நாம் இவ்விடயத்தை கூடி ஆராய்ந்தபோது, மசூர் மௌலானா அவர்கள் அக்காலப் பகுதியில் முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாக அக்கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைக்கு இருந்து வருகின்ற நல்லுறவை முறித்துக் கொள்ளும் வகையில், அவரை நாம் மு.கா.வில் இருந்து பறித்தெடுக்கும் வகையில் செயற்படக் கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டு, மசூர் மௌலானாவுக்குப் பதிலாக எமது கட்சியில் இருக்கின்ற சட்டத்தரணி இமாமை நியமிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டு விட்டு, அதனை பிரபாகரனுக்கு தெளிவுபடுத்தினோம். தற்போது இங்கு சமூகமளித்துள்ள எமது முன்னாள் எம்.பி. இமாம் அதற்கு சாட்சி பகர்வார்.

1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் வடக்கு- கிழக்கில் இக்கட்சியின்பால் தமிழ் பேசும் மக்களை அணி திரட்டுவதற்காக செனட்டர் மசூர் மௌலானா, தனது நாவன்மை மிக்க பீரங்கிப் பேச்சின் மூலம் பெரும் பங்காற்றியுள்ளார். அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களை மக்கள் தவற விடுவதில்லை. மக்கள் அணி அணியாகத் திரண்டு வருவார்கள். தந்தை செல்வாவின் தளபதிகளாக கருதப்பட்ட மசூர் மௌலானா, அமிர்தலிங்கம் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்றால் நான் நேர காலத்துடன் சைக்கிளில் சென்று காத்திருப்பேன். வடக்கு கிழக்கில் இளைஞர்கள், வயோதிபர்கள் எல்லோரும் மசூர் மௌலானாவின் கம்பீரமான பேச்சைக் கேட்பதற்கு பெரும் தாகத்துடன் காத்திருப்பார்கள்.

மெல்லிய உருவத்தைக் கொண்டிருந்த தந்தை செல்வநாயகம் அவர்களின் குரலும் சத்தம் குறைந்ததாகவே இருந்தது. அவர் பேசுவது சிலவேளை வெளியே கேட்காது. மசூர் மௌலானாவே தனது கம்பீரமான குரலில் அவற்றை வெளிப்படுத்துவார். தந்தை செல்வாவின் கொள்கை, கோட்பாடுகளை மக்கள் மத்தியில் விதைத்து தமிழரசுக் கட்சியின் பக்கம் மக்களை கவர்ந்திழுத்த பெருமை மசூர் மௌலானாவையே சாரும்.

இன்று முஸ்லிம்களுக்கு தனி அலகு பற்றி பேசப்படுகிறது. ஆனால் எமது தமிழரசுக் கட்சி, முஸ்லிம்களுக்கு தனி அலகு அல்ல, தனி அரசு வழங்கப்பட வேண்டும் என்று எப்போதோ சொல்லி விட்டது. 1951 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி மாநாடுகளில் வடக்கு- கிழக்கில் தமிழ் அரசு அமைவது போன்று ஒரு முஸ்லிம் அரசும் அமையும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியிலும் மசூர் மௌலானா போன்ற தலைவர்கள் இருந்தார்கள் என்பதை நாம் பெருமையாகக் கூறிக் கொள்கின்றோம்.

தமிழ்பேசும் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அனைத்துப் போராட்டங்களிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மசூர் மௌலானா தமிழ் தலைவர்களுடன் சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக வீட்டுக்காவலில் மட்டுமல்ல சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

இவரது ஆற்றல் , ஆளுமைகள் பாராளுமன்றத்தில் வெளிப்பட வேண்டும் என்பதற்காக தந்தை செல்வா 1960 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி சார்பில் அவரைப் போட்டியிட வைத்த போதிலும் எம்.எஸ்.காரியப்பரிடம் 119 வாக்குகளினால் தோல்வியுற்றமை பெரும் துக்ககரமான சம்பவமாகும். என்றாலும் அப்போதைய பாராளுமன்றத்தின் மேல் சபையான செனட் சபைக்கு எமது கட்சியினால் மௌலானா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதில் கூட அவரால் நீண்ட கால நீடிக்க முடியவில்லை. 1968 ஆம் ஆண்டு கல்முனைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு தந்தை செல்வாவினால் பணிக்கப்பட்டபோது செனட்டர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு களமிறங்கினார். அதிலும் சில நூறு வாக்குகளினால் தோல்வியுற்றார்.

மசூர் மௌலானா அவர்கள், கல்முனை மாநகர முதல்வராகப் பணியாற்றிய போது அப்பகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நாம் அவருடன் பல தடவைகள் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோது எமக்கு நல்ல திருப்திகரமான தீர்வுகளை வழங்கி தமிழர்களையும் அரவணைத்து ஏனைய முஸ்லிம் தலைமைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். பொதுவாக எல்லா விடயங்களிலும், எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவராக அவர் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார்.

1978 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடன் எமது முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் முஸ்லிம்களுக்கான சுய நிர்ணய உரிமைகள் பற்றி பல தடவைகள் பேசியிருப்பதுடன் தனிக் கட்சிக்கான அங்கீகாரத்தையும் ஆசிர்வாதத்தையும் வழங்கியிருந்தார்.

அத்துடன் சிவசிதம்பரம், சம்பந்தன் போன்றோரும் அஷ்ரப் அவர்களுடன் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள், தீா்வுகள், முஸ்லீம் அலகு என்பன பற்றி நிறையப் பேசி வந்துள்ளனர்" என்று மாவை சேனாதிராஜா தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் செனட்டர் மசூர் மௌலானாவின் அரசியல் பொது வாழ்வைப் பிரதிபலிக்கும் குறுந்திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

இதில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.மன்சூர், ஏ.எச்.எம்.அஸ்வர், பஷீர் சேகுதாவூத், பிரதி அமைச்சர் அமீர் அலி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், கலை, இலக்கியவாதிகள் புத்திஜீவிகள் என பெரும் எண்ணிக்கையிலான பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

செனட்டர் மசூர் மௌலானாவின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணி அன்சார் மௌலானா ஏற்புரை நிகழ்த்தினார்.

இதன்போது மசூர் மௌலானாவின் நினைவாக அவர் தலைவராகப் பதவி வகித்த மருதமுனை மஸ்ஜிதுல் கபீா் பள்ளிவாசல் கட்டிட நிர்மாணப் பணிக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் 25 இலட்சம் ருபா நிதி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(செயிட் ஆஷிப்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2