எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, January 02, 2016

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இலவச வைஃபை

Print Friendly and PDF

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு இலவச வைஃபை இணையதள சேவையை மக்களவை உறுப்பினர் ப. குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் ஏற்கெனவே கோவை, மதுரை விமான நிலையங்களில் விமான பயணிகளுக்கு இலவச வைஃபை இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மற்றும் க்வாட்ஜென் வயர்லெஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வந்தன. இந்த வசதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.


திருச்சி மக்களவை உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவருமான ப. குமார் வைஃபை சேவையை தொடங்கி வைத்தார். விமான நிலைய இயக்குனர் பி.சி.எச். நெகி, திருச்சி பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் ராஜூ, மற்றும் விமான நிலையத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியின் போது திருச்சி பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது:பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வைஃபை வசதியை இலவசமாக ஏற்படுத்தித்தர இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி தற்போது திருச்சி விமான நிலையத்துக்கு அந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் விமான பயணிகள் தங்களின் மடிகணினி, டேப்லெட், ஆன்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்களில் இணையதள வசதியை பெற முடியும்.

பயணிகளுக்கு இந்த வசதி முதல் 15 நிமிடத்துக்கு இலவச வைஃபை வசதி கிடைக்கும். அதை நீடிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நேரத்தை நீடித்துக் கொள்ளலாம். இந்த சேவை உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகளுக்கும் கிடைக்கும். முதல் 15 நிமிட இலவச வைஃபை உபயோகத்தை ஒரு செல்போன் எண்ணுக்கு மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே பெற முடியும். இதற்கு தனியாக ஒன்டைம் பாஸ்வேர்டு உண்டு. அதை பயணிகள் தங்கள் கருவிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இலவச உபயோக நேரத்திற்கு பின்னரும் பயன்படுத்தும் பயணிகள் ‘ஆன்லைன்’ மூலம் ரூ.30, ரூ.50, ரூ.90, அல்லது ரூ.150 செலுத்தி முறையே 30, 60, 90 நிமிடங்களுக்கு அல்லது ஒரு நாளிற்கு தங்களது உபயோக நேரத்தை நீட்டித்துக்கொள்ளலாம். ஒரே பயணி ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தியும் இலவச சேவையை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

எங்கும் இலவச இணையதள வசதி: திருச்சி மாநகரில் ஏற்கனவே பல விடுதிகள், கல்லூரிகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் திருச்சி விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வைஃபை வசதி ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் திருச்சி மாநகரில் எங்கும் இலவச இணையதள சேவை கிடைக்கும் நிலை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

(திருச்சி - சாஹுல் ஹமீட்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2