Published On: Sunday, January 10, 2016
மலையத்தில் இன்னும் ஒரு மீரியபெத்த: ஹேவாஹெட்ட ஹோப் தோட்டத்தில் உருவாகும் நிலை
நுவரெலியா மாவட்டம் அங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேவாஹெட்ட - ஹோப் தோட்ட கீழ் பிரிவில் காணப்படும் மண்சரிவு அபாயம் காரணமாக, 23 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து, விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு பாரிய கற்பாறை ஒன்ற தனது இடத்தை விட்டு விலகியுள்ளது. மேலும் பாரிய கற்பாறைகள் உருளும் நிலையில் உள்ளன.
இந்தநிலையில், மண்சரிவு தொடர்பாக இடம்பெயர்ந்த மக்கள் கூறுகையில்,
இந்த தோட்டத்தில் இவ்வாறான மண்சரிவு அபாயம் இன்று நேற்று அல்ல தொடர்ந்து 11 வருடங்களாக இருந்து வருகின்றது. அவ்வாறான காலப்பகுதியில் நாங்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து பின் வீடுகளுக்கு சென்று விடுவோம்.
இவ்வாறிருக்க இங்கு வந்த அதிகாரிகள், அரசியல்வாதிகளின் முயற்சியால் எங்களுக்கு பிரிதொரு இடத்தில் காணி வழங்கி வீடுகள் கட்ட முயற்சி எடுக்கப்பட்டன.
காணியும் ஒதுக்கி, அளந்து வரைபடமும் பெறபட்டு விட்டது. ஆனால் இதுவரைக்கும் காணியும் கிடைக்கவில்லை, வீடும் கிடைக்கவில்லை. எங்களது தோட்ட குடியிருப்புக்களின் மேல் பகுதியில் பாரிய கற்பாறைகள் காணப்படுகின்றன.
அவையே மழை காலங்களில் குடியிருப்புக்களை நோக்கி நகர்கின்றன. தற்போதும் அதுவே நடந்துள்ளது. இதனால் நாங்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் மிகவும் அச்சத்துடன் பல வருடங்காளாக வாழ்ந்து வருகின்றோம்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு உடனடியாக தீர்வினை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறினர்.
ஹோப் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டு 23 குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்து இருந்தாலும், இவர்கள் அடங்களாக மொத்தமாக 150 குடும்பத்தினர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களில் 127 குடும்பங்கள் மண்சரிவு பாதிப்பு இருந்தும் இடம்பெயரவில்லை. குறித்த இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக ஏற்கனவே தேசிய கட்டிட ஆய்வு நிலையம் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆய்வு அறிக்கையை வழங்கியுள்ளது.
(க.கிஷாந்தன்)








