Published On: Wednesday, January 13, 2016
பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கண்டனம்
இந்நாட்டில் சிறுபான்மைகளின் மீதுள்ள காழ்ப்புணர்வின் மற்றுமொரு வெளிப்பாடே நவமணி பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டமையாகும். இச்செயற்பாடு கண்டனத்துக்குரியது. இந்த செயற்பாடு தொடர்பான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜனநாயக விரோத செயல் தொடர்பாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிடும்போது
நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் சிறுபான்மைகளின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் பணியையும், மூவின மக்களையும் அரவணைத்துச் செல்லும் பணியையும் பொறுப்போடு செய்து வரும் ஊடகம் என்ற வகையில் நவமணி முன்னிலை வகிக்கின்றது. கடந்த கால யுத்த சூழலிலும் நடுநிலை தவறாது தனது பணியை மக்களுக்கான தேவையறிந்து செய்து வந்தது. இதற்கு அந்த நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் மர்ஹூம் அஷ்ஹர் மற்றும் என்.எம். அமீன் ஆகியோரின் அயராத முயற்சியே பிரதான காரணமாகும்.
சமூக பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதிலும், சமூகங்களுக்கான ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு சில பேரினவாத குழுக்களால் ஏற்படுத்தப்பட்டு வரும் அநியாயங்களை நடுநிலைத் தன்மையோடு வெளிப்படுத்தும் பத்திரிகை நிறுவனம் மீது அரங்கேற்றப்பட்டுள்ள இந்த தாக்குதல் முயற்சி நாட்டில் அமைதியான சூழலை குழப்பும் தொடர் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே கருத வேண்டியுள்ளது.
ஊடகத்துறை மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் மூலம் நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகும் அதேவைளைஇ சமூகங்களுக்கிடையில் வலுப்பெற்றுவரும் ஒற்றுமை சீர்குலைக்கப்படும்.
எனவேதான் இவ்வாறான குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை ஊடக நிறுவனங்களுக்கான பாதுகாப்பு விடயம் தொடர்பாக கூடிய கவனமெடுக்கப்படும் எனவும் பிரிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
(எஸ்.அஷ்ரப்கான்)
