Published On: Monday, January 11, 2016
எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேசம் கல்வியில் பாரிய சவாலை எதிர்நோக்கும் - இதற்கு அனைவரும் ஒன்றினணயுங்கள்
தற்போது வெளியான உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் குறிப்பிட்டுக்கூறும் வகையில் அட்டாளைச்சேனையில் எந்தவொரு மாணவனும் ஒரு துறையிலும்கூட சோபிக்காமையானது எமக்கு மட்டுமல்ல எமது பிரதேசத்துக்கும் மிகுந்ததொரு கவலையை தருவதாக சமூகத்திற்கான ஒன்றியத்தின் பொதுச் செயலாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முகாமைத்துவ உதவியாளருமாகிய அஸ்ஹர் றிபாஸ் தெரிவித்தார்.
குறித்த ஒன்றியத்தின் தலைவரும் கந்தளாய் பிரதேச செயலகத்தின் கணக்காளருமான எஸ்.எச்.சபீக் தலைமையில் இடம்பெற்ற ஐடியல் பியுபிள்ஸ் லீக் "சமூகத்திற்கான ஒன்றியத்தின்” உயர்மட்ட குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்
சமகாலமாக எமது பிரதேசத்தின் கல்வி நிலை மிகக் கவலைதரும் விடயமாக அமைந்து காணப்படுகின்றது. இந்நிலைமை தொடர்ந்து செல்லுமாக இருந்தால் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கல்வி நிலை எதிர்காலத்தில் பாரியதொரு சவாலை எதிர்நோக்கவேண்டிவரும். இந்நிலைமையை மாற்றியமைக்க எமதூரிலுள்ள கல்விமான்களும்இ அரசியல் அதிகாரமுள்ள அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே எமது பிரதேசத்தின் கல்வி நிலையை மாற்றியமைக்க முடியும்.
அட்டாளைச்சேனை வரலாற்றை நாம் பின்நோக்கிப் பார்ப்போமாக இருந்தால், அதிகளவிலான கல்விமான்களும், அதிகாரமிக்க அரசியல்வாதிகளும், தேசிய ரீதியில் பல சாதனைகளை படைத்துவந்த வீரர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பிரதேசமாகும். இப்பிரதேசம் மாகாண மட்டத்தையும் கடந்து தேசிய ரீதியாக பேசப்பட்டு வந்ததொரு பிரதேசம் என்றால் அது மிகையாகாது. இப்பிரதேசம் சமகாலமாக மங்கிவருவதை நாம் அவதானிக்கக் கூடியாகவுள்ளது.
அது மாத்திரமல்லாமல், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை அறபிக் கல்லூரி, பெண்கள் அறபிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கலாசாலை, கல்விக் கல்லூரி, ஒலுவில் மகாபொல பயிற்சி நிலையம், கிராமிய தொழில் பயிற்சி நிலையம் போன்றவைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருகின்ற கல்வியாளர்களை உறுவாக்கும் பிரதேசத்தின் நிலைமை இவ்வாறு காணப்படுவது மிகுந்த கவலையைத் தரும் விடயமாகும்.
எமது பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள், இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், இலங்கை கணக்காளர் சேவை கணக்காளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிபர்கள், உலமாக்கள் அனைவரும் ஒன்றினைந்து எமது பிரதேசத்தின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி செயற்படல் வேண்டும். இவ்வாறு செயற்பட தவறும் பட்சத்தில் எமது பிரதேச கல்வி நடவடிக்கையில் பாரிய சவால்களை எதிர்நோக்கவேண்டிவரும் என்றார்.
"சமூகத்திற்கான ஒன்றியத்தின்” உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ஒன்றியத்தின் கல்விஇ கலை மற்றும் கலாசாரத்திற்கான இணைப்பாளர் வி.அர்சாத் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பான அறிக்கையினை மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
அபு அலா -
