Published On: Wednesday, January 13, 2016
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்து கொன்ற சிசுவின் தந்தை கைது
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்து கொலை செய்த சந்தேக நபரான சிசுவின் தந்தையை 13.01.2016 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் 12.01.2016 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த சிசுவுக்கு தாய் புட்டிப்பால் கொடுத்துக்கொண்டிருந்த வேளையில், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையாக மாறி தந்தை குறித்த சிசுவை தாயிடமிருந்து பிரித்து எடுத்து நிலத்தில் அடித்துள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து தாயும் கல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான தாய் மற்றும் சிசு அயலவர்கள் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் தாயை கொட்டகலை வைத்தியசாலைக்கும், சிசுவை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒன்பது மாத ஆண் சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்த ஆண் சிசு ஒன்பது மாதங்களான எஸ்.பிஸாலன் என தெரியவந்துள்ளது.
இதேவேளை கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தாய் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு 12.01.2016 அன்று மாலை மாற்றப்பட்டுள்ளார்.
அதனையடுத்து விசாரணைகளுக்குட்படுத்திய பின் குறித்த தந்தையை திம்புள்ள - பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)



