Published On: Tuesday, February 16, 2016
தெற்காசிய விளையாட்டு விழா இறுதி நாள் நிகழ்வு கோலாகல ஏற்பாடு, விஷேட அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ்!
12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கோலாகலமாக குவாத்தி நகரிலுள்ள இந்திராகாந்தி மெய்வல்லுனர் அரங்கில் இன்று (16) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இன்றைய இறுதி நாள் நிகழ்வுக்கு அசாம் மாநில முதலமைச்சர் தருன் கோகி பிரதம அதிதியாகவும், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சொன்வால், இலங்கை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் விஷேட அதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.
இன்றைய நிகழ்வில் போட்டியில் பங்குபற்றிய அனைத்து நாடுகளின் வீரர்களின் அணி நடையும் இடம்பெறும். அத்துடன் பொலிவுட் நடிகர்களின் இசை, நடன, பாடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை 25 தங்கம், 57 வெள்ளி, 87 வெண்கலமுமாக மொத்தம் 169 பதக்கத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியா 160 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 276 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
12வது தெற்காசிய விளையாட்டு விழாவில் விஷேட அதிதியாக கலந்து கொள்வதற்காக சென்றிருந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இந்திய ஒலிம்பிக் சம்மேளத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) கௌரவிக்கப்பட்டார்.
13வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் 2019ம் ஆண்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஹாசிப் யாஸீன்)

