Published On: Tuesday, March 01, 2016
கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் அமளி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் மாநிலங்களவையை முடக்கினர்.மத்திய முன்னாள் நிதி மந்திரி சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் செய்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற மக்களவையில் சில குற்றச்சாட்டுகளை சுமத்திய அ.தி.மு.க., எம்.பி.க்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அண்மையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாக செய்தி வெளியானது.
இதனடிப்படையில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளிக்கப்பட்டது. நாடாளுமன்றம்செவ்வாய்க்கிழமை கூடியதும், மாநிலங்களவையில் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அவர்கள் அவையை நடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் குரியனின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களையும் எழுப்பினர். அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வழியில்லை என்று கூறிய குரியன், அவையை 10 நிமிஷங்கள் ஒத்திவைத்தார்.
அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் அவையை 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதே பிரச்சனையை மையமாக வைத்து மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளி செய்தனர். இதையடுத்து, மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.