Published On: Tuesday, May 03, 2016
வெற்றுக் கூச்சலுக்கு செவி சாய்க்காது மீளக்குடியேறிய மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைச்சர் றிசாத்
மன்னாரில் பிரசித்திபெற்ற
முசலிப் பிரதேசத்திலே, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கு ஒரு வசதியான
மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த
கிராமங்களுக்கு அண்மித்ததாக அமைந்துள்ள அளக்கட்டு எனும் பிரதேசத்திலேயே இந்த மாதிரிக் கிராமத்தை
அமைச்சர் றிசாத் அமைத்து வருகின்றார்.
இந்த அளக்கட்டு எனும்
புதிய கிராமத்தில் வேப்பங்குளம், பி.பி பொற்கேணி, எஸ்.பி பொற்கேணி,
அகத்திமுறிப்பு, பிச்சைவாணியன் குளம் ஆகிய கிராமங்களில் இருந்து 199௦ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, தென்னிலங்கையில் வாழ்ந்த மக்கள்
மீளக்குடியேறியுள்ளனர். காணி இல்லாத இந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி
அமைச்சர் றிசாத், மீண்டும் குடியேற வழிவகை மேற்கொண்டுள்ளார்.
அவரது தனிமனித
முயற்சியினால் பரோபகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் சுமார் 200
வீடுகள் அந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு
முன்னர் அளக்கட்டுப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனுடன்,
தற்காலிகமாகக் கொட்டில்கள் அமைத்து குடியிருந்த அகதி முஸ்லிம்கள் தாம் படுகின்ற
கஷ்டங்களை எடுத்துரைத்தனர்.
தமக்கு நிரந்தரமான
வீடமைத்துத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர். “மின்சாரம் இன்மையால் தாங்கள்
படுகின்ற கஷ்டங்கள் ஏராளம். இரவு நேரங்களில் பாம்புகளின் தொல்லை. விஷ ஜந்துக்களால்
ஏற்பட்டுள்ள பீதி. பாதைகள் இன்மையால் தாங்கள் படுகின்ற கஷ்டங்கள். போக்குவரத்து
வசதிகள் இல்லை. பிள்ளைகள் கல்வி கற்பதற்கு நீண்ட தூரம் நடந்துசெல்ல வேண்டிய
துர்ப்பாக்கியம். அன்றாட பாவனைப் பொருட்களை வாங்குவதற்குக்கூட சுமார் 03 மைல்கள் நடந்துசென்று நகருக்குச் செல்லவேண்டிய அவலம். குடி
நீரின்றி தாங்கள்படுகின்ற கஷ்டம். இத்தனைக்கும் மத்தியில் தாங்கள் வாழ்க்கையை
கடத்துவதாக அவர்கள் அமைச்சரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.”
அவர்களின் கோரிக்கைகளை
கருத்தில் எடுத்த பின்னரே அமைச்சர் அந்தக் கிராமத்தில் வீடமைத்துக்கொடுத்து
அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
இந்த மாதிரிக்
கிராமத்துக்கான மின்சார இணைப்புகள் தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன. சுமார் ஒருமாத
காலத்துக்குள் மின்சார வசதி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதான
வீதியில் நான்கு கிலோ மீற்றர் காப்பெட் வீதி போடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள உட்பாதைகளுக்கு கிரவல் பரவவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும்
மக்கள் தமது வாழ்வியல் தேவைகளைப் பெற வசதியாக, ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியில்
கட்டிடம் அமைக்கப்பட்டு சதொச நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
௦1-13 ஆம் ஆண்டு வரை
கல்வி பெற வசதியாக “மன்னார் சாஹிரா” எனும் பெயரில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு
பெரிய பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது
தவிர 01-05 ஆம் ஆண்டு வரை கற்பதற்கு அல்/ஹிஜ்ரா எனும் பாடசாலையும்
அமைக்கப்படுகின்றது. இதற்கான நிதி உதவியை ஹபிடாட் நிறுவனம் வழங்குகின்றது.
முன்பள்ளிகள் நான்கு அமைக்கப்படவுள்ளன. ஏற்கனவே இந்தப் பிரதேசத்தில் சொந்தக்
குடிசைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கும் புதிதாக வாழ்வைத் தொடங்கும் மக்களுக்கும்
வைத்திய வசதி செய்வதற்காக ஓர் ஆரம்ப வைத்தியசாலை அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாய், சேய் நலன் பேணும் நிலையங்கள் இரண்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
பொதுவாக மன்னார்
மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினை இன்னும்
தீர்க்கப்படாத நிலையே இருக்கின்றது. இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன்
அமைச்சரவையிலும், பல தடவைகள் பிரஸ்தாபித்துள்ளார். நீர் வழங்களுக்குப் பொறுப்பான
அமைச்சர் ஹக்கீமிடமும் சுட்டிக்காட்டியுள்ள போதும், உருப்படியாக இன்னும் எதுவும்
நடந்ததாக தெரியவில்லை.
அளக்கட்டுக் கிராம
மக்களின் குடிநீர் வசதி கருதி அமைச்சர் தனது சொந்த முயற்சியில் 2000 லீற்றர்
கொள்ளவு கொண்ட நீர்த்தாங்கி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். 06 இடங்களில்
குழாய்க் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
வில்பத்துவை முஸ்லிம்களும்,
அமைச்சர் றிசாத் பதியுதீனும் ஆக்கிரமிப்பதாக எழுந்த வெற்றுக் கூச்சலுக்கு செவி
சாய்க்காது, அமைச்சர் றிசாத் துணிச்சலுடன் இந்த மாதிரிக் கிராமத்தை அமைத்தமை,
அவரது திறமையையும், மக்கள் நலன் பேணும் நன் மனப்பாங்கையும் தெளிவாகக்காட்டி நிற்கின்றது.
சுஐப் எம்.காசிம்