Published On: Tuesday, May 10, 2016
முஸ்லிம் காங்கிரஸ் மனம் வைத்தால் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபைக் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்
முஸ்லிம் காங்கிரஸ் மனம் வைத்தால் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபைக் கோரிக்கையைநிறைவேற்ற முடியும் என நாபீர் பௌண்டேசன் சமூகசேவை அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் யு.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையைக் கோரும் விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளான ஜெமீலும், சிராஸும் குடுமிச் சண்டை பிடித்துக் கொள்வது அடிப்படை நாகரிகமற்ற அரசியல் நகர்வாக பொது மக்களால் அவதானிக்கப்படுகிறது.
உண்மையில், நான் மேற்குறித்த குறு நில மன்னர்கள் சாய்ந்தமருது எனும் பாரம்பரியமிக்க ஊரின் மீது அளவு கடந்த பற்றுள்ளவர்களாக, தாய் மண் நேசர்களாக இருப்பார்களாயின் இவ்விடயம் குறித்து ஊடகங்களிலும், பொதுத் தளங்களிலும் சிறு பிள்ளைகள் போல ஒருவர் மீது ஒருவர் சுட்டு விரல் நீட்டி நொண்டிச் சாட்டு பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
சாய்ந்தமருதிற்கு பிரதேச சபை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். அது வேறு விடயம். ஆனால், அது தங்களால் தான் கிடைக்க வேண்டும் எனும் சுயலாப அரசியல் செய்வோரின் கபட நாடகத்தால் ஊருக்கு வரவிருந்த ஏராளம் நன்மைகள் விடுபட்டிருப்பதை கோஷமிடும் குறு நில ராஜாக்கள் உணர வேண்டும்.
மக்களுக்காகத்தான் அரசியல், உங்கள் சாக்கடை அரசியலுக்காக மக்களை ஏமாற்றும் கேலிக் கூத்து அறிக்கைகளை ஊடகங்களில் பரப்புவதை தவிர்க்க வேண்டும். சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரத்தில்‘யார் குற்றியாவது அரிசாக வேண்டும்' எனும் கோணத்தில் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
அன்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் காலத்தில் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை கோரிக்கை வலுப் பெற்று, அது சாத்தியமாவதற்கான அனேக வாய்ப்புகள் குவிந்து கிடந்தன. ஆனால், அதுவும் ஒரு சில கோடாரிக் காம்புகளின் பச்சோந்தி அரசியல் நகர்வால் தவிடுபொடியாகி சாய்ந்தமருது மக்களை மீண்டும் அரசியல் அனாதையாக்கிய துன்பியல் சரிதத்தை நாம் அனைவரும் அறிவோம்.
சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச அலகு முன்மொழிவுக்கான எல்லா கைங்கரியங்களும் கைகூடி வரும் போது அதை சில தனி நபர்கள் தங்கள் அரசியல் காய் நகர்த்தலுக்காய் சிதைத்து விடுவது மனவேதனைக்குரியது.
இன்றைய திகாமடுல்லை மாவட்டத்தின் அரசியல் போக்கில் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை கோரிக்கையை அமுல்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் சக்திக்கு பெரும் வல்லமையும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் பிரதேச சபைக் கனவை நனவாக்க வேண்டும் என சம்பந்தப்பட்டோரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(எஸ்.அஷ்ரப்கான்)
