எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 12, 2016

இந்தியாவின் நடைமுறையைப் பின்பற்றி ஆகக்கூடிய சில்லறை விலை - அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

Print Friendly and PDF

அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று மாலை தெரிவித்தார்.

"வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை" விளக்கும் செய்தியாளர் மாநாடு நிதியமைச்சில் இடம்பெற்ற போது பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிஸன், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை, சதொச, சுங்க திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் ரிஷாட் இங்கு கூறியதாவது,

மக்களின் சுமையை கட்டுப்படுத்தி, வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக நிதியமைச்சு, கிராமியப் பொருளாதார அமைச்சு, கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆகியன இணைந்து பணியாற்றுகின்றன. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாங்கள் இரண்டு தடவை பேச்சு நடத்தியிருக்கின்றோம். ஆ
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பது தொடர்பில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் முறையை இங்கும் அமுல்படுத்த தீர்மானித்துள்ளோம்.

துரிதமாக நகரும் நுகர்வுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக எனது அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, இரவு பகலாக பணியாற்றி வருகின்றது.

நாங்கள் நடாத்திய தொடர் பேச்சுக்களின் விளைவாக பதினைந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு நிரந்தர விலையை நிர்ணயித்துள்ளோம். இவற்றை பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடலை, நெத்தலி, சீனி ஆகிய பொருட்களின் ஆகக் கூடிய சில்லறை விலை தொடர்பாக இன்னும் சில தினங்களில் உரிய நடவடிக்கை எடுத்து அறிவிப்போம். அத்தியாவசியப் பொருட்களின் ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளிவரும்.

இந்த நடைமுறைக்கு மாற்றமாக செயற்படும் வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வர்த்தக நிலையங்களை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொள்ளவும், அவற்றை கண்காணிக்கவும் 200 பேரை பணிக்கமர்த்த முடிவெடுத்துள்ளோம். இன்னும் ஓரிரு தினங்களில் 3000 - 4000 வர்த்தக நிலையங்களை சுற்றிவளைத்து சட்டமுரணாகச் செயற்படும் வர்த்தகர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்போம்.

பதினைந்து அத்தியாவசிப் பொருட்களுக்கு ஆகக்கூடிய சில்லறை விலைகளை நிர்ணயித்தது போன்று மொத்த வியாபாரிகளும் இந்த பதினைந்து பொருட்களின் விலைகளை பகிரங்கப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் வற் வரி மீதான அமுலாக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்திற்கு மாவட்டம் அத்தியாவசியப் பொருட்களின் விலை குளறுபடிகளுக்கு இதுவே காரணமென்று பேசப்படுவது அப்பட்டமான பொய்யாகும். இன்னும் ஒரு மாதத்திற்குள் விலைகளின் ஏற்றத்தாழ்வுகள் நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையினால் சீராகும்.

வாழ்க்கைச்செலவைக் குறைப்பதற்கான அமைச்சரவை உபகுழு இந்த விடயங்கள் தொடர்பில் மாதாமாதம் ஒன்றுக்கூடி நிலைமைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2