Published On: Monday, August 24, 2015
ஹமீடின் மறுப்பு
இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எனது பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக சிலர் சில ஆக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை என வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது
இதில் அமாஸ் அப்துல் லத்தீப் என்பவர் எனது பெயரைப் பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பாக சில குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதேபோன்று குறித்த ஒரு இணையத்தளத்தில் தலைவருக்கு செயலாளரை நீக்க முடியாது. ஆனால் செயலாளருக்கு தலைவரை நீக்க முடியும் என்று நான் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இணையத் தளத்துடன் நான் தற்போது தொடர்பு கொண்டு விசாரித்தபோது செய்தியின் மூலத்தை பார்த்து உரிய மறுப்பை உடனடியாக வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
வை.எல்.எஸ். ஹமீட் ஏதாவது எழுத வேண்டுமெனில் தனது சொந்தப் பெயரில் எழுதுகின்ற தைரியம் அவருக்கு இருக்கின்றது. ஏவல் ஆட்கள் மூலம் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
மறுபுறத்தில் இன்னும் சிலர் சிலரின் துாண்டுதலின் பேரிலோ அல்லது தங்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசையிலோ என்மீது சேறு பூசுகின்ற அறிக்கைகளையும் முகநுால் பதிவுகளையும் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதில் வரலாற்றைக் கூட தெரியாமல் தலையைக் கால் என்றும் காலை வால் என்றும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
நியாயத்திற்கான போராட்டம் என்கின்ற அடித்தளத்திலிருந்துதான் வை.எல்.எஸ். ஹமீடின் அரசியல் பயணம் 1986 ஆம் ஆண்டு மறைந்த தலைவருடன் ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்த துாய்மையான போராட்டம் சில்லறை அறிக்கைகள் மூலமோ சேறு பூசுகின்ற பதிவுகள் மூலமோ செய்கின்ற போராட்டமல்ல. என்பதை அவரது பெயரைப் பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலுகின்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் வை.எல்.எஸ். ஹமீடின் பேனை எப்பொழுதாவது எழுத ஆரம்பித்தால் அதில் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி கொண்டு உண்மையும் சத்தியமும் இருக்கும். அவதுாறுகளோ படுதுாறுகளோ நிச்சயமாக இருக்காது.
அதே நேரம் எனது பெயரில் மற்றவர்களைப் பற்றி படுதுாறு யாராவது எழுதினால் தயவு செய்து வாசகர்கள் அறிந்து கொள்ளுங்கள் அது நிச்சயமாக வை.எல்.எஸ். ஹமீடின் பேனாவிலிருந்து பிறக்கக் கூடிய ஒன்றல்ல. அதேநேரம் இவ்வாறு எழுதுகின்றவர்களிடம் எனது வினயமான வேண்டுகோள் வை.எல்.எஸ். ஹமீட் கடந்த 30 ஆண்டுகளாக மனச்சாட்சியை அடகு வைக்காத அரசியல் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். எனவே உங்களது தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக அவருக்கு களங்கம் கற்பிக்க முனைவதையும் அல்லது அடுத்தவர்கள் மீது உங்களுக்கு கோபம் இருக்கின்றது என்பதற்காக வை.எல்.எஸ். ஹமீடின் பெயரைப் பயன்படுத்தி அடுத்தவர்மீது சேறு பூசுவதற்கு முனையாதீர்கள். இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். மறுமையில் எனக்கும் உங்களுக்கும் கேள்வி கணக்கு இருக்கின்றது என்பதாகவும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.அஷ்ரப்கான், எம்.வை. அமீர்)