Published On: Wednesday, August 26, 2015
கடந்த தேர்தலில் இரண்டு வகையான வெற்றிகளை இறைவன் எமக்குத் தந்தான் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
'கடந்த பொதுத்தேர்தல் முடிவுகளிலிருந்து வெற்றிகளை நாம் இரண்டு வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று பிராந்தியரீதியில் நாம் அடைந்துள்ள வெற்றி மற்றையது தேசிய ரீதியில் நமது பங்களிப்புடன் நாட்டு மக்கள் பெற்றுள்ள வெற்றி' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்தி வருகின்ற தொடர் மக்கள் சந்திப்புகளில் ஒன்று நேற்றைய தினம் 25.08.15 அன்று காத்தான்குடி NFGG பிராந்திய வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் "நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் நாம்
பிராந்திய ரீதியில் முழுமையான வெற்றியை பெற்றுக்கொள்ளவில்லை எனும் ஆதங்கத்தினை எமக்குள் தோற்றுவித்திருந்தாலும் அள்ளாஹ் எமக்கு இத்தேர்தலில் நேரடியாகவும் மறைமுகமாக பல வெற்றிகளைத் தந்துள்ளான் என்பதை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த தேர்தலில் நமக்கு கிடைத்த வெற்றிகளை இரண்டு வகையாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். இம்முறை நாம் பிராந்திய ரீதியில் நல்லாட்சிக்கு விரோதமான 25வருட ஊழல் மோசடி மிக்க சுயநல அரசியல் தலைமைகளை ஒட்டு மொத்த மக்கள் சக்தியாக நின்று முழுமையாக தோற்கடித்திருக்கின்றோம். இது நமக்குக்கிடைத்த முதலாவது பாரிய வெற்றியாகும்.
இரண்டாவது தேசிய ரீதியில் தொடர்ந்தும் நல்லாட்சிக்காக பாடுபட்டவர்கள் என்ற வகையில் நமது பங்களிப்புடன் மீண்டும் இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையாகும்.
அத்துடன் இப்பொதுத்தேர்தலானது கடந்த ஜனவரி 8ம் திகதி இந்த நாட்டில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான போராட்டத்தின் இரண்டாம் கட்டமென்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். இதனை எமது தேர்தல் பிரச்சார மேடைகளிலும் நாம் தொடர்ச்சியாக சொல்லி வந்தோம்.
அந்த வகையில் ஜனவரி 8ம் திகதி நாம் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் இந்த நாட்டில் மலரச் செய்த நல்லாட்சியினை தொடர்ந்தும் வலுப்படுத்தும் வகையில் அள்ளாஹ் இத்தேர்தல் முடிவுகளினை தேசிய ரீதியில் மிகப்பெரும் வெற்றியாகவே எமக்கு ஆக்கித்தந்துள்ளான். இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சிஇ கடந்த காலங்களில்
முஸ்லிம்களை இந்த நாட்டில் முற்றாக அழிக்கத் துடித்த பொது பல சேனா போன்ற இனவாத சக்திகளுக்கு மக்கள் அடித்த சாவு மணி அத்துடன் சிறு பான்மை மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுக்கொண்டுள்ள பெருமளவு ஆசனங்களின் எண்ணிக்கை என்பன இதற்கு சான்றுகளாகும். இத்தனை காலமும் பேரினவாத சிந்தனைகளுக்கூடாக தவறாக திசை திருப்பப்பட்டுவந்த சிங்கள மக்கள் இம்முறை பெரும்பான்மையாக இனவாத சக்திகளை இந்தத் தேர்தலில் நிராகரித்திருக்கின்றமையானது அள்ளாஹ் எமக்கு இத்தேர்தலில் வழங்கியிருக்கின்ற பாரிய வெற்றியாகும்.
இவை அனைத்திற்குப் பின்னாலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய நமது தொடர்ச்சியான பங்களிப்பும் காத்திரமான முன்னெடுப்புகளும் இருந்து வந்தமையை யாரும் மறுத்துரைக்க முடியாது.
எனவே நாம் அள்ளாஹ் எமக்கு வழங்கியுள்ள இந்த தேர்தல் வெற்றிகளை தெளிவாக பொருந்திக்கொண்டு எமது நல்லாட்சிக்கான பயணத்தினை மிகுந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வேண்டும்." என்று தெரிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )