Published On: Wednesday, August 26, 2015
கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்
கரையோரப் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று (26) மதியம் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி அங்குள்ள பணிக்குழாமினரை சந்தித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இது வரையில் திணைக்களம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை கேட்டறிந்த ஜனாதிபதி கரையோரப் பாதுகாப்பு தொடர்பில் எழுகின்ற பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.
கரையோரங்களை வளப்படுத்திப் பேணும் கருத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதையும் அதற்கு தாக்கம் செலுத்தும் சட்டவிரோத கட்டிடங்களை உடனடியாக அகற்றுவதற்கு பொலிசாரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.கே. பிரபாத் சந்திரசிறி உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
( ஜனாதிபதி ஊடகப் பிரிவு )