Published On: Sunday, August 23, 2015
மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி - சீனித்தம்பி யோகேஸ்வரன்
எனக்கு வாக்களிக்கக் கூடாது என்று எனது கட்சியைச் சார்ந்தவர்களே பிரச்சாரம் செய்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களினால் இயன்றளவு வாக்களிக்கப்பட்டு நான் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றேன். அதற்காக மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நான் கௌரவமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்!
பாராளுமன்றத்திற்கு தெரிவான சீ.யோகேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்!
2015ம் நடைபெற்ற இந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அடியேனும் பாராளுமன்றத்திற்குத் தெரிவானதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன் கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பெறாத பல அனுபவங்களை இம்முறை இத்தேர்தலில் பெற்றுக் கொண்டேன்.
குறிப்பாக இந்தத் தேர்தலில் நான் தலைமைப் பீடத்தாலும், மத்திய குழுவாலும் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில் இடை நடுவில் எனது கட்சியில் இருக்கின்ற முக்கிய பிரதிநிதிகளாலேயே வேட்பாளர் பதவியில் இருந்து நிறுத்துவதற்கு முயற்சி எடுத்தும் நான் வேட்பாளராக வந்து வெற்றியும் பெற்றுள்ளேன்.
அதுதவிர முதலில் எனக்கு வாக்களிக்கக் கூடாது என்று எனது கட்சியைச் சார்ந்தவர்களே பிரச்சாரம் செய்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களினால் இயன்றளவு வாக்களிக்கப்பட்டு நான் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றேன். அதற்காக மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நான் கௌரவமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தத் தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் இயன்ற சேவையை ஆற்றுவேன். எந்தவேளையிலும் இலஞ்சம் ஊழல் என்று இல்லாமல் மிகவும் தூய்மையான மனதுடன் எனது சேவையைச் செய்வேன். முன்பு எனது சேவை எவ்வாறு இருந்ததோ அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் எனது சேவை தொடரும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்வதோடு மீண்டும் மீண்டும் எனது மகிழ்ச்சியை இந்த மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தத் தேர்லில் நான் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக பலர் உழைத்தார்கள் ஆனால் மக்கள் என்னைத் தெரிவு செய்து வெற்றிபெறச் செய்திருப்பது பெரும் சாட்டையடியாக இருக்கும் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
வடக்கு கிழக்கைப் பொருத்த வரையில் நீண்ட காலமாக இந்த மண்ணில் ஒரு அரசியற் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது உறவுகள் பல தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள். அந்தத் தியாகங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக நீண்ட காலமாக பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது. இந்த வகையில் முன்பிருந்த அரசாங்கங்களுக்குச் சோரம் போகாமல் இருந்து கொண்டு மக்களுக்காகச் Nவையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் அதிகப் படியான நம்பிக்கை வத்திருந்ததன் காரணமாகத் தான் இம்முறையும் கடந்த காலங்களை விட மிக அதிகப் படியான வாக்குகளை அழித்திருக்கின்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட கூடுதலான ஆசனங்களைப் பெற முடிந்திருக்கின்றது.
மக்களிடம் பல கேள்விகள் இருக்கின்றதை நான் அறிவேன் உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் வருவார்கள் அதன் பின்னர் அவர்களைப் பிடிக்க முடியாது என்று அதனை கடந்த காலங்களிலும் நான் அவதானித்தேன். ஆனால் நாம் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்த பின்னர் பல மக்களை கிராமப் புறங்களில் சென்று எம்மால் முடிந்தவரை சந்தித்திருக்கின்றோம். பல வறிய மக்களிடம் இந்த வாக்கின் பெருமை தெரியாமல் இருக்கின்றது. இந்த நாட்டின் அரசாங்கம் இந்த வறிய மக்களுக்கு அதனைத் தெரியப்படுத்த வேண்டும். இந்தக் கிராமப் புறங்களில் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட இலஞ்சங்களுக்காக வாக்களித்த நிலையும் காணப்பட்டது.
அத்துடன் எமது மக்களின் வாக்குகள் பல நிராகரிக்கப்பட்டும் இருக்கின்றது. நிராகரிக்கப்பட்டமைக்குக் காரணம் எமது மக்களுக்கு வாக்களிக்கும் முறை பற்றி தெளிவின்மை இதனை வருகின்ற அரசங்கம் நிவர்த்தி செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிப்பதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இம்முறை முப்பது சுயேட்சைக் குழுக்களும் பதினாறு அரசியற் கட்சிகளுமாக மொத்தம் நாற்பத்து ஆறு கட்சிகள் போட்டியிட்டன. இதனால் மக்கள் பெரிதும் அசௌகரியம் அடைந்து விட்டார்கள் எனவே எதிர்வரும் தேர்தல்களில் அது என்ன தேர்தலாக இருந்தாலும் மக்களுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் அரச அதிகாரிகளை வைத்து மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இல்லாது விடின் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள்.
அத்துடன் இந்த நாட்டில் வாக்களிப்பது முக்கியம் என்பதை மக்கள் உணரும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் வாக்களிப்பதைப் பினதள்ளிப் போடுகின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பின் நகர்ப்பகுதி மக்களே மிகவும் படித்த மக்களாக இருந்தும் பெரும்பாளனவர்கள் வாக்களிக்கவில்லை. எனவே வாக்களிப்பது எமது உரிமை அதனைக் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படுத்தப்படுமாக இருந்தால் எல்லா மக்களும் வாக்களிப்பார்களாக இருந்தால் நான் நினைக்கின்றேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபத்து நான்கு வீதம் இருக்கின்ற தமிழர்கள் நான்கு ஆசனங்களைக் கட்டாயம் பெற முடியும் அது முடியாது என்று இல்லை.
ஆனால் அதற்கு வாக்களிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். நாம் கிராமம் நகரம் தோறும் செல்லவுள்ளோம் தற்போது வந்திருக்கின்ற எமது மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் செல்ல இருக்கின்றார்கள். நாம் அனைவரும் சேர்ந்து கிராமம் மட்டும் அல்லாது நகரப் பகுதிகளிலும் எமது சேவையை ஆற்றுவோம் என்பதை உறுதியளிக்கின்றோம்.
(வாழைச்சேனை நிருபர்)