Published On: Monday, September 14, 2015
800 ஏக்கர் காணிகளை சுவீகரித்து கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்படும்.பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் றவூப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் கனவான கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுமார் 800 ஏக்கர் காணிகளை சுவீகரித்து கல்முனை மாநகர் பாரியளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம் கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் 2015-09-13 அன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்டுள்ள கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்டமானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் கல்முனை மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட விடயம் என்று தெரிவித்த அமைச்சர் றவூப் ஹக்கீம்இ சுவீகரிக்கப்படும் அனைத்துக்காணிகளுக்கும் காணி உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும்இ நீவாரணமாக குறிப்பிட்ட அளவு காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் பண முறியாகவும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இம்முறிகளை பெற்றவர்கள் குறித்த முறிகளை வங்கிகளில் முதலீடு செய்யவும் முடியும் என்றும் தெரிவித்தார்.
புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கல்முனை பிராந்தியம் எதிர்நோக்கும் பாரிய இடத்தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த அமைச்சர்இ அமைய இருக்கும் புதிய நகரம் வெள்ளம் உள்ளிட்ட அனைத்து அனர்த்தங்களுக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவில் திட்டங்கள் வரையப்படுவதாகவும் புதிய வீதிகள் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளும் வடிகான்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது போலிவோரியன் கிராமத்துக்கு அருகில் குடியிருப்புக்காக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் கொள்வனவு செய்துள்ள சிறிய காணித்துண்டுகள் பற்றிக் கருத்துத் தெரிவித்த றவூப் ஹக்கீம்இ புதிய வீதிகள் மற்றும் வடிகான்கள் செல்லும் இடங்களைத் தவிர்ந்த ஏனைய காணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு பொருத்தமான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இம்முறை வரவுசெலவு திட்டத்தில் குறித்த கல்முனை அபிவிருத்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கித்தருவதாக பிரதமர் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்த ஹக்கீம் அடுத்த வருடத்தில் அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
சாய்ந்தமருது தோணா அபிவிருத்திப்பணிகளின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக திட்ட பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் இரண்டாம் கட்டத்தில் வீதிகள் அமைத்தல் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களான பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை போன்ற பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் றவூப் ஹக்கீம்இ புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த துறைசார்ந்த அமைச்சருடாக சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்இ கடந்தகால யுத்தத்தின் காரணமாகவும் ஏனைய அனர்த்தங்கள் மற்றும் கடந்தகாலங்களில் ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுக்கிடக்கும் அனைத்து விளையாட்டு மைதானங்களையும் இதோடு சம்மந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக தன்னால் முடிந்த அனைத்து நகர்வுகளையும் செய்வேன் என்று தெரிவித்தார். குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-எம்.வை.அமீர் -