Published On: Wednesday, September 09, 2015
ஏர்வாடி அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்காவின் 841வது ஆண்டு சந்தனக்கூடு
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நேற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூடு திருவிழா நடந்தது.ஏர்வாடி தர்காவில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்காவின் 841வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா, கடந்த ஆக., 16ல் துவங்கி சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் ஏராளமான யாத்ரீகர்கள் தர்காவிற்கு வரத் துவங்கினர். செவ்வாய்க்கிழமை இரவு 10 முதல் அதிகாலை 2 மணி வரை பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து தாரை, தப்பட்டைகள் முழங்க, வாண வேடிக்கையுடன் 12 குதிரைகள், ஒரு யானை முன்னே செல்ல சந்தனக் கூடு ஊர்வலம் நடந்தது.
இந்தாண்டு 12 அடி அதிகமாக 35 அடி உயரத்துடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவை வலம் வந்தது. அதிகாலை 4.15 க்கு பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை போர்த்தப்பட்டது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். வருகிற செப்.,14 ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.தர்கா தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாருக் ஆலீம், உதவித்தலைவர் செய்யது சிராஜுதீன், மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெவ்வை உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதார, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன.