Published On: Wednesday, September 09, 2015
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தாலும், அவரது சிந்தனைகள், எண்ணங்கள், லட்சியங்கள் மறையாது
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தாலும், அவரது சிந்தனைகள், எண்ணங்கள், லட்சியங்கள் மறையாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் வீட்டிற்கு சென்றார். அங்கு கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் மற்றும் பேரன் சலீம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
கலாம் இல்லத்தில் உள்ள கலாம் கேலரியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது: ‘‘2003ஆம் ஆண்டு ராமேஸ்வரம் வந்த போது டாக்டர் கலாமின் சகோதரரை சந்தித்து சென்றேன். கலாம் மறைவின்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இப்போது வாய்ப்பு கிடைத்தது. கலாம் மறைந்தாலும் அவரது சிந்தனைகள், எண்ணங்கள், லட்சியங்கள் மறையாது. இளைஞர்கள், மாணவர்கள் அவரது லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு முன்வருவதன் மூலம் கலாம் என்றும் நம்முடன் வாழ்வார்,
சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேச தயங்கும் எதிர்க்கட்சியினர், மக்களை குழப்புகின்றனர் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை குறைகூற முடியாமல் எதிர்க்கட்சியினர் திணறுகின்றனர். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். சென்னையில் நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின் புதிய தொழிற்சாலைகள்,வேலைவாய்ப்புகள் பெருகும்.ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் புரியாமல் எதிர்க்கட்சியினர் தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்புகின்றனர். மக்கள் பிரச்னையை சட்டசபையில் பேச தயங்கும் இவர்கள், வெளியில் உண்மைக்கு புறம்பாக பேசுகின்றனர்.செப்.,18 ல் நடக்கும் நடிகர் சங்க தேர்தலில், சங்கத்திற்கு உழைத்தவர்கள், நல்லவர்கள் வெற்றி பெறுவர் என்றார்.
சரத்குமாருடன் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் ராமேஸ்வரம் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். சரத்குமாரின் வருகையையொடட்டி, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். அதே சமயம், "கலாம் மறைந்த தினத்தன்று வர முடியவில்லை என்றபோதிலும், அவர் இறந்து ஏறக்குறைய ஒன்றரை மாதங்களான பின்னர்தான் சரத்குமாருக்கு கலாம் நினைவிடத்திற்கு வர 'டைம்' கிடைச்சுதா? " என்ற முணுமுணுப்புகளையும் அங்கு கேட்க முடிந்தது