Published On: Wednesday, September 09, 2015
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:சிறைக்குச் சென்றவர்களெல்லாம் குற்றவாளிகள் அல்ல என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. பழிவாங்கும் நடவடிக்கைகளால், விலைபோகும் சாட்சியங் களால் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் தான் ஏராளம். உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்கள் மிக மிகக் குறைவே.அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஆயுள் தண்டனைப் பெற்று சிறைக்குச் சென்றுள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகின்றனர். அவர்களது குடும்பங்கள் சிறைக்கு வெளியே வறுமையில் தவிக்கின்றன.
சிறை வாழ்க்கை மனிதனை சீர்திருத்தத்தானே தவிர அவனது வாழ்க்கையை சீரழிப்பதற்காக அல்ல என்பதைத்தான் இந்தியச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் 15 அல்லது 20 ஒருசிலர் 25 ஆண்டுகள் கடந்த நிலைகளிலும் முதுமை பீடித்தவர் களாக சிறைகளில் நடைப்பிணங்களாக நடமாடி வருகின்றனர்.சிறைக்குச் சென்ற சில வருடங்களிலேயே சிறை வாழ்க்கை அவர்களைத் தூய்மைப்படுத்துகிறது என்றுதான் அறிகிறோம். அவர்கள் விரைவில் வெளியே வந்து நெறியோடு வாழ விரும்புகின்றனர். ஆனால் அரசின் பாராமுகமான நடவடிக்கைகள் அவர்களது வாழ்க்கையைப் பாழாக்கி விடுகிறது.
கடந்த காலங்களில் 10 ஆண்டுகள் முடித்துவிட்டாலே, அவர்களது நன்னடத்தைச் சான்று பெற்று, பொதுமன்னிப்பில் விடுதலை செய்த முன்மாதிரிகள் இருக்கின்றன. மதுரை லீலாவதி கொலை வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளில் கூட பொதுமன்னிப்பில் விடுதலைப் பெற்றிருக்கிறார்கள்.ஆகவே சிறை அனுபவம் பெற்ற தமிழக முதல்வர் அவர்கள், சிறைவாசிகளின் சிரமம் பற்றி நன்றாகவே அறிந்துள்ளவர்கள். எனவே அவர்களை முதல்வர் அவர்கள் தாயுள்ளத்தோடு கருணை காட்டி, பொது மன்னிப்பில் 10 ஆண்டுகள் கடந்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமுமுக கோருகிறது.
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்த வழக்கம் இருந்ததால், அதே அடிப்படையிலேயே, பொது மன்னிப்பில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், சிறைக் காலங்களில் பரோலில் செல்லும் சிறைவாசிகள், தவிர்க்க இயலாத காரணத்தால் சிறைக்கு மீண்டுவருவது தாமதமானால், அவர்களுக்கு பரோல் தடை, பொதுமன்னிப்பு கிடையாது போன்ற இரக்கமற்ற தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்றும்,
மேல்முறையீடு செய்த சிறைவாசி என்றால் பரோல் கிடையாது என்ற நிலைப்பாடும் சிறைவாசிகளைத் துன்புறுத்தும் சட்டமாகவே உள்ளது. அதையும் தமிழக அரசு தளர்த்தி, மேல்முறையீட்டு வழக்கு நீடிக்கும் நிலையில், பரோல் கொடுத்து இரக்கம் காட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,மேலும் பரோல் கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டி முஸ்லிம்களுக்கு பரோலிலும் நெருக்கடி கொடுப்பது, வீட்டைச் சுற்றி காவலர்களை நிறுத்திவைத்து மனநெருக்கடிக்கு ஆளாக்குவது போன்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதையும் சீர்செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
(திருச்சி - சாகுல் ஹமீது)