Published On: Wednesday, September 09, 2015
கூட்டுறவு உத்தியோகஸ்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - அமைச்சர் கி.துரைராசசிங்கம்
எமது கூட்டுறவு அதிகாரிகளுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாகவும், வெறுமனே பதிவுகளை மேற்கொள்வதாக மாத்திரமே இருக்கின்றார்கள் எனவும், பல குறைபாடுகளை எமது ஆய்வு குறிப்பிடுகின்றது. இந்த நிலையில் மாற்றம் வரும் வகையில் கூட்டுறவு உத்தியோகஸ்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்!
இந்த நாட்டில் பெரிதும் சவால்களுக்கு மத்தியில் இயங்குகின்ற துறை இந்தக் கூட்டுறவுத் துறையாகவே இருக்கின்றது. நான் பதவியேற்றதும் எனக்கு பெரும் குறைபாடுகளுடன் ஒப்படைக்கப்பட்ட துறை இந்தக் கூட்டுறவுத் துறை. அமைச்சுப் பொறுப்பை ஏற்று இந்தக் கூட்டுறவுத் துறையினைக் கள ஆய்வு மேற்கொள்வதற்காக இரு குழுக்களை நியமித்தேன் அந்த ஆய்வில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டன. கூட்டுறவு அமைப்பில் இத்தனை அதிகாரிகள் இருந்தும் ஏன் இவ்வாறான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன என்று எனக்குத் தெரியவில்லை.
எமது களநிலை ஆய்வுகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதன் மூலம் கண்டறியப்பட்ட குறைபாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் என்கின்ற இந்த மூன்று துறைகளிலே கால்நடை அபிவிருத்தியையும் விவசாயத்தையும் ஒருங்கிணைத்துச் செல்லுகின்ற ஒரு உயரிய நிறுவனமாக இந்தக் கூட்டுறவுத்துறை இருக்கின்றது. என்னுடைய அமைச்சுக்களின் மூல ஆளி என்றே இதனைச் சொல்லலாம்.
எமது ஆய்வறிக்கையிலே கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவதன் ஊடாக சிறந்த பயிற்சியினை கூட்டுறவு உத்தியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. கூட்டுறவுத் திணைக்களத்தில் இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள் இருந்து வந்திருந்தாலும் இனிமேல் இந்தப் பயிற்சிப் பட்டறைகள் எல்லாம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
என்னுடைய அமைச்சின் காலம் முடிவுறும் வேளையில் கூட்டுறவுத் துறை சிறப்பாக இருந்தது என்கின்ற பெயரை எமது அதிகாரிகள் பெற்றுத் தருவீர்கள் என்றால் அவர்களுக்கு நான் பல கோடி நன்றிகளைத் தெரிவிப்பவனாக இருப்பேன். சோவியத் ஒன்றியம் முழுக்க முழுக்க கூட்டுறவுத் துறையினால் கட்டியெழுப்பப்பட்டது என்றால் அதனை நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற தன்மையை நாம் காண்கின்றோம். கூட்டுறவு என்பது மக்களைக் கூட்டாகச் சேர்த்து இயங்கிக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கங்களும் மற்றைய கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் நாம் அதிக வினைத்திறன் மிக்க செயற்பாட்டினை மக்களுக்கு வழங்க முடியும்.
எமது கூட்டுறவு அதிகாரிகளுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாகவும், வெறுமனே பதிவுகளை மேற்கொள்வதாக மாத்திரமே இருக்கின்றார்கள் எனவும் பல குறைபாடுகளை எமது ஆய்வு குறிப்பிடுகின்றது. தற்போது தொழில்நுட்ப வசதியின் காரணமாக தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே கூட்டுறவு நிறுவனங்களை இயக்குகின்ற வாய்ப்புகள் தற்போது உள்ளன.
எனவே இனிவரும் காலங்களில் அமைந்துள்ள தொழில்நுட்பத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு தங்கள் தங்கள் அதிகாரப் பரப்பெல்லைக்குள் இருக்கும் நிறுவனங்களை அர்த்தமுள்ளதாக மாற்றிட அதிகாரங்களை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த நேரமும் அதிகாரிகளின் பிரசன்னம் தங்கள் சங்கத்திற்கு இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு கூட்டுறவு அமைப்புகளுக்கு இருந்திட வேண்டும். இவ்வாறு செயற்படும் போது இந்தக் கூட்டுறவுத் துறையினை இந்த நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் செய்திடும் வல்லமை எமது உத்தியோகஸ்தர்களுக்கு உண்டு.
மறைந்த அப்துல்கலாம் அவர்கள் கூறியது போன்று விழ்த்துக் கொண்டே கனவு காண வேண்டும். நான் இந்தக் கூட்டுறவுத் துறையினுடைய ஊழியனாக இருந்து எனக்கு வருகின்ற சம்பள அதிகரிப்பினைப் பெற்றுக் கொண்டு பதவியுயர்வுகளைப் பெற்றுக் கொண்டு இறுதியில் வீட்டுக்குச் செல்லும் போது ஒரு ஓய்வு பெற்ற உத்தியோகஸ்தராக செல்லும் நிலையில் இருக்காமல் நீங்கள் செல்லுகின்ற போது நீங்கள் சார்ந்த கூட்டுறவுத் துறையும் அந்த மக்களும் உங்கள் பிரிவிற்காக உண்மையிலேயே மனம் கசிந்து நீங்கள் செல்வதை உண்மையான இழப்பாகக் கருதும் அளவிற்கு உங்கள் சேவை இருக்க வேண்டும் இதனை இலட்சியமாக வைத்து கனவு காண வேண்டும் அந்த கனவினை நனவாக்க அனைவரும் அர்ப்ணிப்புடன் உழைப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,