Published On: Tuesday, September 08, 2015
கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஒலுவில் கிராமத்திற்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜையம்
அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒலுவில் கிராமம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தென்கிழக்கின் தலைநகரமாக ஒருகாலத்தில் மர்ஹூம் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான அல்ஹாஜ். எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் எதிர்வுகூறப்பட்ட ஒலுவில் துறைமுகம் கட்டுமானப்பணிகள் ஆரம்பித்தன் பின்னர் இன்றுவரை ஒலுவில் கடற்கரையானது கரையை நோக்கி பல நூற்றுக்கும் மேற்பட்ட மீற்றர்கள் கடல்நீர் உள்ளே வந்து நிலத்தை அபகரித்திருப்பதால்
பல ஆயிரக்கணக்காண தென்னை மரங்களும், பெறுமதியான நிலமும், மீனவர்களின் வாடிவீடுகளும் கடலால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிச்ச வீடு மற்றும் அருகாமையில் இருக்கும் கட்டிடங்களும் கடலுக்குள் சென்றுகொண்டிருக்கும் பெரும் அபாயம் அங்கு தோன்றியுள்ளது.
கடலரிப்பை தடுக்க கரையிலிருந்து சுமார் 100 மீற்றருக்கும் அப்பால் பாரிய கற்பாறைகள் துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக மூன்று தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டும் எந்த பலனுமின்றி ஒலுவில் மீனவர்களின் தொழிலும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமையானது கவலையளிக்கிறது.
எனவே கிழக்கு மாகாண முதல்மைச்சர் என்ற வகையில் அம்மீனவர்களுக்கான நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுக்கவும், ஒலுவில் ஊருக்குள் ஊடுருவும் கடரிப்பைத் தடுக்க உடனடிய சம்மந்தப்பட்ட சகல அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடாத்தி அதற்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமை 12.09.2015 ஒலுவில் கிராமத்திற்கு உரிய அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு நேரில் சென்று அங்கு நடந்துவரும் கடலரிப்பு மற்றும் இதர அசம்பாவிதங்களையும் கண்டறியவுள்ளதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.