எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, September 16, 2015

தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்று

Print Friendly and PDF

மர்ஹும் எம்இஎச்.எம். அஷ்ரப் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23
ஆம் திகதி சம்மாந்துறையில் முஹம்மது மீரா லெப்பை ஹுஸைன் மற்றும் மதீனா உம்மா அவர்களுக்கு சிரேஷ்ட புதல்வனாக கல்முனையில் பிரபலமான காரியப்பர் குடும்பத்தில் பிறந்தார்.

1977 ஆம் ஆண்டு எம்.எச்.எம். அஷ்ரப்,  பேரியல் இஸ்மாயிலுடன் தனது இல்லற வாழ்வில் நுழைந்தார்.சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே அஷ்ரப் இலங்கை அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டார். அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். தந்தை செல்வநாயகத்தை தனது அரசியல் குருவாக அஷ்ரப் வகுத்துக் கொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைகளில் தீவிர பங்கு கொண்ட எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.சிறுபான்மைச் சமூகம் தனித்துவங்களை அடையாளப்படுத்தி தனது உரிமைகளுக்காக போராடாதவரை அந்த சமூகங்கள் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலையை அவர் அறிந்தார். இந்த நிலையில் தான் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு
மாகாணத்தின் காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமானது.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களை ஓரணியில் இணைப்பதற்கு பெரு முயற்சி எடுத்தார்.முஸ்லிம்களின் தனித்துவமான குரலாக அது ஒலிக்கத் தொடங்கியது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலாக அரசியல் பிரவேசம் செய்தது. எதிர்பார்த்ததற்கு மேலாக வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸுக்கு  ஏகோபித்த ஆதரவை வழங்கினார்கள்.

1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலாக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் நான்கு இடங்களைக் கைப்பற்றியது. எம்.எச்.எம். அஷ்ரப், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஏ. அபூபக்கர், என்.எம். புகார்தீன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள்.1994 ஆம் ஆண்டில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. அது மட்டுமன்றி அஷ்ரப் சந்திரிக்கா ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு கிழக்கில் மட்டும் தம் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி வைத்திருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக சிந்திக்கவும், செயற்படவும் தொடங்கியது.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்தத் தேர்தலில் ஒன்பது இடங்களைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை தேசியத் தலைவராகவும்இ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தேசியக் கட்சியாகவும் பரிணமிக்கச் செய்தது.

1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பொது ஜன ஐக்கிய முன்னணி அரசில் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டா ர்.அவர் காலத்தில் திட்டமிடப்பட்ட பணிகளில் ஒலுவில் துறைமுகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கல்முனை மீன்பிடித் துறைமுகம்இ காலித் துறைமுக அபிவிருத்திஇ எலிசபத் இறங்குதுறை அபிவிருத்தி போன்றவை இன்றும் எம்மத்தியில் நிலைத்து நிற்க வல்லன.புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை வரைவதில் அஷ்ரப் மிகத் தீவிரமாக உழைத்திருந்தார்.

ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதன் பெறுபேறாகத் தான் ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் பெரும் பொறுப்பு அவருக்குக் கிட்டியது. சுமார் 3 மணித்தியாலங்களாக அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் உரையாற்றிய உரை இலங்கை அரசியல் வரலாற்றில் நினைவு கூரப்படும் சிறப்புக்குரியதாகும்..

அரசியல் என்பது அஷ்ரப் அவர்களின் வாழ்வில் ஒரு சிறு பகுதி மட்டுமே. அதற்கு அப்பால் அஷ்ரப் பல்துறை சார்ந்த ஆளுமையே அவரை ஒரு மகா புருஷராக எம்முடன் நடமாட வைத்துள்ளது. அஷ்ரப் அவர்களின் பேச்சுத் திறனும் தர்க்கிக்கும் ஆற்றலும், விவாதத் திறனும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்தை அணுகி ஆராய்வோர் அவரிடம் அமானுஷ்யமான ஒரு ஆற்றல் பரிணமிப்பதை ஏற்றுக் கொள்வார்கள்.அந்த வகையில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு வாழ்க்கைத் தத்துவமாக நிற்கின்றார். அதனால் தான் அவரால் மரணத்தை நோக்கி சிந்திக்க முடிந்தது. மரணத்தோடும் அவரால் போராட முடிந்தது, அவரால் மரணத்தை நோக்கி அறைகூவல் விடுக்கவும், மானுடத்தை நோக்கி நேசக்கரம் நீட்டவும் முடிந்தது.

(16.09.2000) அன்று மிகப் பெரும் துயரத்தைக் கொண்ட நாளாக விடியும் என்று எவருமே நினைத்திருக்கவில்லை. அன்று காலை 9.05 மணியளவில் கொழும்பு
பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கிழக்கு நோக்கிப் பறந்து சென்றது.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்இ தேசிய ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சருமான எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அன்று காலை இறக்காமத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக மேலும் 14 பேருடன் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கொழும்பிலிருந்து 110 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அரநாயக்கப் பகுதியில் இருக்கும் “பைபில் றொக்” (Bibil Rock) மலைப்பகுதியின் மேலாக அந்த ஹெலிகொப்டர் பறந்து கொண்டிருந்த போது திடீர் விபத்துக்குள்ளானது. பலத்த வெடியோசையுடன் தீப்பிழம்பாக வானத்தில் வெடித்துச் சிதறியது. அமைச்சரும் அவருடன் பயணம் செய்த மேலும் 14 பேரும் அந்த விபத்தின் போது அந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள் .ஹெலிகொப்டர் சிதைவுகளுக்கு மத்தியிலிருந்து கருகிய நிலையிலான சடலங்கள் மீட்கப்பட்டன. அமைச்சர் அஷ்ரபின் ஜனாஸாவை சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க அடையாளம் காட்டினார். 

அமைச்சர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி மரணமானார் என்ற செய்தி கிழக்குமாகாணத்தை எட்டிய போது மக்கள் வாய்விட்டுக் கதறினார்கள். சோகம் தாழாமல் தலையில் அடித்துப் புலம்பினார்கள்.அமைச்சரை வரவேற்பதற்காக மாபெரும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண வீதியெங்கும் துயரவெள்ளம் கரைபுரண்டது.

வரலாறு காணாத சோகத்தில் கிழக்கு மாகாணம் மூழ்கிப் போனது. தனது சொந்த சகோதரனை இழந்த துயரத்தில் கிழக்கு மாகாண மக்கள் செயலிழந்து நின்றார்கள்.

அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சுவனபதி கிடைக்கவும் ,அவருடைய கப்று சுவனபதியால் விசாலமாக்கப்படவும் வல்ல அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திப்போம்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2