Published On: Friday, September 11, 2015
பரந்தன் சிவபுரம் குடியிருப்புப் பற்றிய செய்தி உண்மைக்குப் புறம்பானது - முன்னாள் பா.உ சந்திரகுமார் கண்டனம்.
பரந்தன் சிவபுரம் மக்கள் குடியிருப்பு கடந்த காலத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களிலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம், இது மாவீரர் குடும்பங்களைக் கொண்ட குடியிருப்பு என்றும் இதனால்தான் இங்கே பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் இந்தப் பாதிப்புகளுக்கு நானும் காரணம் எனவும் தமிழ்வின் என்ற இணையத்தளம் வழமையான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதை நான்; வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமம் 1950 மற்றும் 1952 காலப்பகுதிகளில் மத்திய வகுப்புத்திட்டத்தின் ஒவ்வொருவருக்கும் 15 ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட காணிகளை கொண்ட பிரதேசமாகும். இவ்வாறு ஒன்பது பேருக்குச் சொந்தமான காணிகளில் 286 மேற்பட்ட குடும்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் . இந்த காணி உரிமையாளர்களில் இரண்டு பேர் கிளிநொச்சியில் உள்ளனர். ஏனையவர்கள் தொடர்பில் தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
ஆனாலும் இந்த ஒன்பது பேரிடமும் அக்காலப்பகுதியில் வழங்கிய காணி ஆவணங்கள் உண்டு. இதேவேளை யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டு தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற இந்தச் சிவபுரத்தைச் சேர்ந்த மக்களிடம் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை.
எனவே இங்கு வாழ்கின்ற மக்களுக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வருவதில் பாரிய சட்டச்சிக்கல் உண்டு. வலுவான காணி ஆவணங்களுடன் உரிமையாளர்கள் இருக்கின்றபோது அந்தக் காணிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கின் காணி உரிமையாளர்கள் நீதி மன்றத்தை நாடும் போது வழங்கிய அதிகாரிகள் தங்களின் பதவியை இழந்து வீடு செல்லவேண்டிவரும். இது விவரம் அறிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
இருந்தும் இந்த மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு பராமரிப்பின்றிய நிலையில் இருந்த இந்தக் காணிகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களே நீண்டகாலமாகக் குடியிருக்கிறார்கள் என்பதை விளக்கி, இது தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி இந்தக் காணிகளை இந்த மக்கள் பெறக்கூடிய முயற்சிகள் என்னால் எடுக்கப்பட்டன. இந்த மக்களுக்கு உள்ளிட்ட இவர்களைப்போன்றவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஆட்சியுரிமை சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் எதிர்த்து அதனை நிறைவேற்றவிடாது தடுத்து பல முயறிச்சிகளை மேற்கொண்டிருந்தேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
இதனைத் தொடர்ந்து நான் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கமைவாக மத்திய அரசின் காணி ஆணையாளர் நாயகம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தபோது, அவரைச் சிவபுரம் பிரதேசத்துக்குச் சென்று மக்களின் வாழ்நிலையை நேரிற் பார்வையிடுவதற்கான ஏற்பாடு என்னால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கண்டாவளை பிரதேச செயலாளருடன் காணி ஆணையாளர் நேரடியாக சிவபுரம் உழவனூர், நாதன்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் மத்திய வகுப்புத்திட்டக் காணிகளில் வாழ்கின்ற மக்களின் நிலைமைகளைப் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அமைவாக நாதன்குடியிருப்பு மக்களின் காணிப் பிணக்குகள் தீர்க்கப்பட்டு அவர்களுக்குரிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட உதவி திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சிவபுரம் மக்களுடைய காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமான முதற்கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த அரசின் கொள்கைக்கமைய அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் இந்த மக்களின் தற்காலிக வீட்டுத்திட்டங்களுக்கு மின்னிணைப்பையும் பெற்றுக்கொடுத்திருந்தோம். அத்துடன் எம்மால் மேற்கொள்ளக்கூடிய ஏனைய உதவித்திட்டங்களையும் தாரளமாகவே வழங்கியருக்கிறோம். இதை அந்தப் பிரதேசத்தின் பொது அமைப்புகளும் மக்களும் நன்கறிவர்.
இதேவேளை நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய தற்போது சிவபுரம், உழவனூர் உள்ளிட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே இதில் உள்ள சட்டச்சிக்கல்களை விளங்கிகொள்ளாது தமிழ்வின் என்ற இணையத்தளம் முட்டாள்தனமாக செய்திகளை பதிவேற்றியுள்ளது. மாவீரர் குடும்பங்கள் என்றோ போராளிகள் குடும்பம் என்றோ கிளிநொச்சியில் எவரும் புறக்கணிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டது கிடையாது. அறிவியல்நகர் பிரதேசத்தில் படையினர் வசம் இருந்த மாவீரர் வீட்டுத்திட்டத்தை மீளப் பெற்று அந்த மக்களுக்கு அவற்றை வழங்கி அவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். இது மட்டுமல்ல ஏராளம் ஏராளம் போராளிகளுக்கும் போராட்டத்தில் தமது உயிர்களை இழந்த போராளி குடும்பங்களுக்கும் கூட நாம் பல உதவிகளைச் செய்திருக்கிறோம். இன்னும் சொல்வதானால், அவர்களுக்கு பல விடயங்களில் முன்னுரிமையைக் கூட அளித்திருக்கிறோம். இது போன்ற பல பணிகளை மீள்குடியேற்றத்திற்கு பின்னரான காலத்தில் மேற்கொண்டுள்ளோம்.
இந்த நிலையில் திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பான முறையில் இவ்வாறான செய்திகளை அரசியல் உள்நோக்கம் கொண்டு வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. அது மட்டுமல்ல உண்மைக்குச் செய்கின்ற அவமரியாதையுமாகும். அத்துடன் இந்த மக்களுக்கும் இந்த மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளைச்சேர்ந்தோருக்கும் செய்கின்ற அவமரியாதையாகும்.
மக்களுக்கு எதனையும் செய்யாது உண்மைக்கு புறம்பாக இவ்வாறு வதந்திகளை பரப்பி வருபவர்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் இணையத்தளங்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் செய்தியை திட்டமிட்டு இவ்வாறு பொய்யாக உருவாக்கியதன் நோக்கம் ஏன் என்றால். இந்தக் காணிகளை சிவபுரத்தில் குடியிருக்கும் மக்கள் பெறப்போகிறார்கள். அவர்களுக்கான வீட்டுத்திட்;டங்களும் பிற உதவிகளும் கிடைக்கவுள்ளன. எனவே இவையெல்லாம் தன்னுடைய முயற்சியினால்தான் கிட்டியிருக்கின்றன என தமிழ்வின் இணையத்தளத்துக்கு நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் காட்ட முற்படுவதன் விளைவேயாகும் என்பதையும் தெரிவிக்கிறேன்.