Published On: Saturday, September 12, 2015
வாக்களிக்கும் உரிமைக்காக அறைகூவல் விடுக்கிறார் ரகீப் ஜாபர்
புலம் பெயர் தொழிலாளர்கள் தனக்குள் புலம்புவதால் மட்டும் தங்கள் பிரச்சினைகள் ஒருபோதும் தீர்ந்து விடப் போவதில்லை. அரசியல் வாதிகள் வந்து காலம் காலமாக ஆசை வார்த்தைகளை பேசி காலம் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். பேச்சில் கிடப்பதை செயல்களில் காண்பதற்கே வாக்குரிமையை இன்று வேண்டி நிற்கிறோம். என்கிறார் இலங்கை புலம்பெயர் தொழிலாளர் அமைப்பின் பிரதம அமைப்பாளர் ரகீப் ஜாபர் .
மத்திய கிழக்கிலுள்ள அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் யாருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக சவுதியில் 600 000. கதார் 200 000. துபாய் 300 000 குவைத் 300 000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். இவர்கள் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளின் மூலமாவது காலப் போக்கில் இந்த ஏழை தொழிலாளர்களின் அபிலாசைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வைக்க அது ஏதுவாக அமையும்.
எனவே இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு எல்லோரும் இந்த கோரிக்கையை வலுப்பெறச் செய்ய எம்மோடு ஓரணியில் இணைந்து கொள்ளுங்கள். மேலும் சமூக வலைத்தளங்களிலும் பின்னூட்டல்கலிலும் இந்த கருத்துக்களை பிரதிபலிப்போம் . இந்த விடயத்தை ஒரு தேசிய பேசு பொருளாக மாற்றாதவரை எம்மால் வாக்களிக்கும் வசதி என்கின்ற உரிமையை வென்றெடுக்க முடியாது போய்விடும். மேலும் நல்லாட்சி என்கின்ற எண்ணக்கருவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஒன்றிணைந்து கிடைக்கும் சந்தர்ப்பம் இதைவிட்டால் இனிமேலும் கிடைக்குமா இல்லையா என்பது சந்தேகம்தான். ஆகவே புலம்பெயர் தொழிலாளர் சகோதரர்களே, மற்றும் அவர்களது உறவுகளே !.இன்று காலம் கனிந்திருக்கிறது , தேசிய அரசாங்கம் எனும் இந்த இரண்டு வருடங்களுக்குள் எமது வாக்களிக்கும் வசதியை பெற்றுக்கொள்ள குரல் கொடுப்போம் .
அதனை மூலப் பொருளாகக் கொண்டு எமது இதர தேவைகளை பூர்த்தி செய்யலாம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் இலங்கை புலம்பெயர் தொழிலாளர் அமைப்பின் பிரதம அமைப்பாளர் ரகீப் ஜாபர் .
-எம்.வை.அமீர்-