Published On: Saturday, September 12, 2015
அரசியல் வங்குரோத்துத்தனம் என்ன என்று மாகாணசபை உறுப்பினர் சுபைர் அவர்களுக்கு விளக்கம் இல்லை- வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவிப்பு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் சுபைர் அவர்கள் முன்வைத்த கருத்துகள் முற்றிலும் அறியாமையில் இருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படுவதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்த்ததாகவும் ஊருக்கு எம்.பி கேட்கும் காலத்தில் காத்தான்குடிக்கு எம்.பி வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என மாகாணசபை உறுப்பினர் சுபைர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் வினவியபோதே வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
"வங்குரோத்துக்காரன் என்றால் பிச்சைக்காரன் என்று அர்த்தம், தேசியப்பட்டியல் உறுப்புரிமையை, மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்த ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியிடம் பிச்சையாகவே பெற்றுக்கொண்டார்.
இதனைத்தான் வங்குரோத்துத்தனம் என்று சொல்வோம். அவர் எப்படி ஆசனம்
பெற்றார் என்ற அந்தரங்கம் எங்களுக்குத் தெரியும். பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை மக்கள் தெரிந்துகொள்வார்கள்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தமைகான உண்மையான காரணத்தை உறுப்பினர் சுபைர் இருட்டடிப்புச் செய்ய முயற்சிக்கின்றார். எங்களது எதிர்ப்பு நடவடிக்கை காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் தூண்டுதலினால் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறைத் தாக்குதலுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது.
தனக்கு தேசியப்பட்டியல் ஆசனம் உறுதிசெய்யப்பட்டவுடன் ஹிஸ்புல்லாஹ்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறையைக்
கட்டவிழ்த்துவிட்டார். பெண்கள் உட்பட எமது 10க்கும் அதிகமான ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். எங்களது ஆதரவாளர்களின் கடைகள், வீடுகள் சேதமாக்கப்பட்டன. இந்த நாட்டில் மிக அமைதியாக நடந்து முடிந்த பொதுத் தேர்தல் ஹிஸ்புல்லாஹ்விற்கு தேசியப்பட்டியல் கிடைத்தவுடன் வன்முறைக்களமாக மாறியது இதனையே நாம் எதிர்த்தோம்.
இத்தகையவர்கள் பாராளுமன்றம் சென்று எதனை சாதிக்கப் போகின்றார்கள் என்று வினா எழுப்பினோம். இதனை வங்குரோத்துத் தனம் என்று நாளுக்கொரு மேடையும் வாரத்துக்கொரு கட்சியும் தாவுகின்ற சுபைர் போன்றவர்கள் தெரிவிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஒரு அரசியல் கட்சி, எமது தேசிய அரசியல் பிரவேசம் நிகழ்ந்து இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு மக்கள் ஆதரவை எம்மால் பெற முடிந்திருக்கின்றது. எங்களுடைய வேட்பாளர்கள் ஊழல் பேர்வழிகள் கிடையாது, கட்சி தாவுகின்ற கொள்கையற்றவர்கள் கிடையாது, காசு கொடுத்து சீட் கேட்கின்றவர்கள் கிடையாது, மக்களின் வாக்குகளை களவாடுகின்றவர்கள் கிடையாது. உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், வெளிப்படையானவர்கள், மக்கள் நலனுக்கு முதலிடம் கொடுக்கின்றவர்கள், பிரதேசவாதம் பார்க்காதவர்கள். இப்படி எங்களுடைய கட்சியும் அதன் வேட்பாளர்களும், அங்கத்தவர்களும் நல்லவர்கள், எங்களுடைய பெயரைப்போலவே நாங்களும் எங்களது செயற்பாடுகளும் நல்லவை. இதனை எவ்வித தயக்கமும் இன்றி எம்மால் எங்கு வேண்டுமானாலும் தைரியமாகச் சொல்ல முடியும்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எமது முயற்சிகளை நாம் முழுமையாக மேற்கொண்டோம், முடியுமானவரை மக்களிடம் எமது கருத்துக்களை எடுத்துச் சென்றோம். எமக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனும் எமது கொள்கையை ஏற்று எம்மை நல்லவர்கள் என்று கண்டதன் பின்னர்தான் அவனுடைய உள்ளத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர்தான் எமக்கு வாக்களித்திருக்கின்றார்.
ஆனால் அத்தகைய நல்லவர்களின் வாக்குகள் எம்மை பாராளுமன்றம் கூட்டிச்செல்ல போதுமானவையல்ல. இது எமக்கு வாக்களித்த அந்த நல்ல மக்களின் குறைபாடு கிடையாது, இதனை நாம் எமது முயற்சிகளின் குறைபாடாகவே காணுகின்றோம். எமது செய்தியை இன்னும் அதிகமான மக்களிடம் நாம் எடுத்துச் சென்றிருந்தால் எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.
இப்போதும் நாம் பின்னிற்கப்போவதில்லை எமது முயற்சிகள் தொடரும் நல்லதை வெல்லவைக்க மக்கள் எங்களோடு அணிசேர்வார்கள். இந்த செய்தியை அறிந்துகொண்ட ஒரு சிலருக்கு இப்போதே நடுக்கம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது.
அதன் விளைவாகத்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை குறிவைத்துத் தாக்குகின்றார்கள். இன்னும் ஒரு சிலர் பிரதேசவாத சாக்கடைக்குள் எம்மை அமிழ்த்தப் பார்க்கின்றார்கள், ஊர்வாதம் பேசி எம்மோடு இருக்கின்ற மக்களை தம்பக்கம் திருப்ப முனைகின்றார்கள். ஆனால் இந்தப் பருப்பு இனி வேகாது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரவேசம் பிரதேசவாதத்தை ஆட்டம் காணவைத்திருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் அடைமொழி அரசியல் செய்கின்ற பலர் தமது தவறுகளை கண்டுகொள்வார்கள். சகோதரர் சுபைர் அவர்கள் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள் தாம் நல்லதுக்கு எதிராக இருக்கின்றோம் என்பதை உணர்ந்துகொள்வார்கள் என்று கருதுகின்றேன். எமது அரசியல் வெளிப்படையானது, எனவே எமது அரசியல் சார்ந்த எல்லா விடயங்களையும் செலவுகள் உட்பட நாம் வெளிப்படையாகவே நடந்துகொள்கின்றோம், இதனை மக்கள் வரவேற்கின்றார்கள், சுபைர் கேட்பதைப்போல நாம் எதற்காகச் செலவழித்தோம் என்று வெளிப்படுத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம், அதனை மக்கள் முன் ஒரு பொறுப்பாக நாம் நிறைவேற்றுகின்றோம்." என்றும் குறிப்பிட்டார்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )