எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, September 12, 2015

மெக்கா மசூதி மீது கிரேன் சரிந்த விபத்தில், பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு.

Print Friendly and PDF

முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்றும், அவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.








இந்த கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நேற்றிரவு (இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 11 மணிக்கு) மசூதியை சுற்றிலும் ஏராளமான ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.

அந்த நேரம், பலத்த இடியுடன் மழையும் வலுத்து பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர். அப்போது மூன்றாவது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 107 பேர் துடிதுடித்து பலியாகினர். காயமடைந்த 238 பேர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத்தில் மின்னல் தாக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் மசூதியே ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. அதே வேளையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், மீட்புப்பணி அசுரவேகத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த மாத இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்க உள்ளது. லட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்க உள்ள நிலையில், மெக்கா பெரிய மசூதியில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களுக்காக அவர்களது உறவினர்களும் சமூக வலைதளங்களில் உள்ள மனிதநேயமிக்க அன்பர்களும், ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ (நிச்சயமாக நாங்கள் அல்லாவுக்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.) என்று கூறி பிரார்த்தனை செய்தனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2