Published On: Monday, March 18, 2013
இந்தியாவின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 343 ஓட்டங்களைக் குவித்தது.
தென்னாபிரிக்கா சார்பில், அம்லா (122), டிவில்லியர்ஸ் (128) ஆகியோரின் சதம் இப்போட்டிக்கு முக்கிய உறுதுணையாக அமைந்தது. அத்துடன், அம்லா - டிவில்லியர்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 238 ஓட்டங்களைத் திரட்டி உலக சாதனை படைத்தது. ஒருநாள் போட்டியில் 3-வது விக்கெட்டுக்கு ஓர் ஜோடியின் அதிகபட்ச ஓட்ட எணணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்பு 1999-ம்ஆண்டு கென்யாவுக்கு எதிராக இந்தியாவின் டெண்டுல்கர் - டிராவிட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 237 ஓட்டங்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த 14 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் மிகச் சிறப்பான துடுப்பாட்டத்தை சஹீட் அப்ரிடி வெளிப்படுத்தினார். இவர் 48 பந்துகளை சந்தித்து 88 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இதில் 8 சிச்சர்களும் அடங்கும். முஹம்மது ஹபீஸ் (57), வஹாப் ரியாஸ் (45)ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 48.1 ஓவர்களில் 309 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பாகிஸ்தான் பறிகொடுத்தது.
இதன் மூலம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா, 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மேலும், வழக்கமாக தென்னாபிரிக்க வீரர்கள் பச்சை நிற உடை அணிந்து விளையாடுவார்கள். ஆனால் இந்த ஆட்டத்தில் 'பிங்க்' நிற உடையுடன் களம் இறங்கினர்.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக அவர்கள் 'பிங்க்' உடையுடன் ஆடியதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
4-வது ஒருநாள் போட்டி டர்பனில் எதிர்வரும் 21-ம் திகதி நடக்கிறது.