Published On: Wednesday, March 20, 2013
பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவோர் மீது மரண தண்டனை?

பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவோர் மீது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அளிக்கும் சட்ட மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் புது டெல்லியில் துணை மருத்துவப் படிப்பு படித்துவந்த மாணவி கூட்டாக பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பிறகு நாடு முழுவதிலும் கோப அலைகள் எழுந்தன. இந்த சம்பவத்துக்குப் பிறகு வன்புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரி்க்கை பரவலாக வைக்கப்பட்டது.
புதிய சட்டமானது மரண தண்டனை வழங்குவது உட்பட கடுமையான தண்டனைகளை வழங்கவும், மற்றவர்களின் பாலியல் செயற்பாடுகள் உள்ளிட்ட அந்தரங்க நடவடிக்கைகளை அவர்களுக்குத் தெரியாமல் பார்த்து பாலியல் திருப்தியடைவது மற்றும் பெண்களைப் பின்தொடர்வதை தண்டிக்கவும், அமிலத் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகால தண்டனை வழங்கவும் இச் சட்டம் வழி செய்கிறது.
அதே நேரம் பாலியல் உறவுக்கு உடன்படுவதற்கு சட்டரீதியாக வைக்கப்பட்டிருக்கும் வரம்பை 16 வயதில் இருந்து 18 வயதாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை செயற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர். இந்த சட்டம் காரணமாக தமது பெண்கள் ஆண்களோடு பழகுவதை ஏற்காத பெற்றோர் இதை தவறாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
(பிபிசி)