Published On: Sunday, March 24, 2013
கிழக்கில் வறுமையான மாவட்டமான மட்டக்களப்பின் நிலைமையை மாற்றவேண்டும்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் வறுமையான மாவட்டமாக உள்ளதாக இவங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இநநிலையினை மாற்றுவதற்கு நாம் எல்லோரும் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை உருவாக்கி முன்னேடுத்துச் செல்லக்கூடிய கடப்பாடு தேவையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாசிக்குடா அமதீஸ் சுற்றுலா விடுதியில் யூ.எஸ்.எயிட் மற்றும் யூ.எச்.பி நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கிழக்கின் சுற்றுலா துறையின் அபிவிருத்தி என்ற தலைப்பிலான ஆய்வு கருத்தரங்கில் பிரதம அதிதியாக கவந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன், சர்வதேச சுற்றுலாத்துறை நிறுவன முன்னாள் தலைவர் ரொபட் பென்லி, கொழும்பு, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் யூ.எஸ்.எயிட் நிறுவன அபிவிருத்தி சிரேஸ்ட திட்ட உத்தியோகஸ்த்தர் த.சக்திவேல், சுற்றுலாத்துறை தொழில் வல்லுனர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; மட்டக்களப்பு மாவட்டமானது உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் பல வரலாற்று கலாச்சாரப் பண்பாடுகளையும், இயற்கை அழகையும் கொண்டமைந்த பிரதேசமாகும். உள்ளுர், வெளிநாட்டு சுற்றுலா பயனிகளைக் கவரக்கூடிய வகையில் திட்டங்களை அமைத்து மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கக் சுற்றுலாத்துறையில் நிபுணர்த்துவம் உள்ளோர் முன்வரவேண்டும்
சுற்றுலாத்துறையை மேலும் விருத்தி செய்வதற்கு சுற்றுலாத் துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குவதற்கு எமது அலுவலகத்தில் நிகழ்ச்சி திட்டப் பணிப்பாளர் ஊடாக வழிவகைகளை செய்துள்ளேன். தாங்கள் முன்வந்து ஆலோசனை வழங்க முன்வரவேண்டும்.
இப்பிரதேசத்தில் கணவர்களை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இவர்களது வாழ்க்கைத்தரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. வறுமை நிலையில் உள்ளவர்களை உல்லாசத் துறையின் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தேசத்தின் மகுடம் மூலம் கிடைக்கப்பெற்ற 130 மில்லியன் நிதியின் மூலம் நகர அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சுற்றுலாத்துறைக்கு ஏற்றவகையில் சுற்றுலா பயனிகளை கவரக் கூடிய வகையில் வாவியை அண்மித்த பகுதி, கடற்கரைப்பகுதி, விவசாயம், மீன்பிடி, வரலாற்று பாரம்பரியம் என பல பகுதிகளாக பிரித்து அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கோட்டைப்பகுதியை சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யும் முகமாக எமது அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு நிதி ஒதுக்கீட்டினை பெறுவதிலும் சரியான இடத்தினை தெரிவு செய்வதில் ஈடுபட்டுள்ளோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
(குகதர்சன்)