Published On: Saturday, March 16, 2013
பொதுபல சேனாவைக் கண்டித்து கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி

முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளைத் நாமும் இலங்கையர் (அபித் ஸ்ரீலங்கிகயோ) என்ற கோஷத்துடன் முன்னெடுப்பதாக ஐ.தே.க முஸ்லிம் எம்.பிக்கள், பிரமுகர்கள் தீர்மானித்துள்ளனர்.
முஸ்லிம்கள் மீதான இனரீதியான செயற்பாடுகள் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமளித்தல், சர்வதேச மட்டத்தில் இச் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தல், மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுத்தல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேரடியாகச் சென்று அந்நாட்டு அரசுகளுக்கு மதவிரோத செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தல் போன்ற முக்கிய தீர்மானங்கள் பலவற்றை ஐ.தே.க முஸ்லிம் எம்.பி.க்கள் எடுத்துள்ளனர். மேயர் சென்டரில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாகப் பேசுவதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளோம். கால அவகாசம் கிடைத்ததும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் குறித்து பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து விளக்கவுள்ளோம்.
அத்தோடு சர்வதேச கவனத்தை ஈர்க்குமுகமாக அந்தந்த நாடுகளில் முஸ்லிம் பிரமுகர்களிடம் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதாலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அரச முக்கியஸ்தர்களைச் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் பொதுபலசேனா செயற்பாடுகளுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடாத்துவதற்கும் ஏனைய பிரதேசங்களிலிருக்கும், கொழும்பு நகருக்கு வெளியிலிருக்கும் முஸ்லிம்களை ஒன்று திரட்டி எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
இக்கூட்டத்தில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, மாநகர முதல்வர் ஏ.கே.எம். முஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.