Published On: Wednesday, March 20, 2013
இஸ்லாத்தைப் பற்றி கருத்துக்கூற பொதுபல சேனாவுக்கு லாயக்கு இல்லை: அமீர் அலி
நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மார்க்க விடயங்களையும், இஸ்லாமிய கோட்பாடுகளையும் பற்றி கருத்துக் கூறுவதற்கு பொது பலசேனா அமைப்புக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் கொங்கிறீட் வீதகள் மற்றும் வடிகான்களை அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் ஆசிரியர் ஏ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; இன்று பொது பலசேனா அமைப்பினர் முஸ்லிம்களின் விடயங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஹலால், முஸ்லிம் பெண்களின் அபாயா மற்றும் புனித அல்குர்ஆன் போன்ற இஸ்லாமிய மார்க்க விடயங்களில் முஸ்லிம் சமூகத்தின் மனம் நோகும்படி அவ்வமைப்பு தொடர்ந்து ஈடுபட்டால் அதற்காக அவர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
எங்களின் மார்க்க விடயங்களை யாருடைய அபிலாஷைகளுக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. மார்க்க விடயங்களை இவர்களுக்காக விட்டுக் கொடுத்துப் போவதற்கு நான் தயாருமில்லை.

இந்த நாட்டைப் பொறுத்தவரை மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல் ஆட்சிக் காலத்தின் போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இப்பிரச்சனைகளை நாங்கள் அரசியலுக்காக சமூகத்தை அடகுவைக்க ஒருபோதும் தயாரில்லை.
முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராக சவால்கள் விடப்படுமாக இருந்தால் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம். சமூகத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய எவ்விதத் தேவையும் எமக்கு கிடையாது. இதனால் நாங்கள் பொது பலசேனா அமைப்பினரைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிங்களப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்றே ஒரே ஒரு காரணத்திற்காக நாங்கள் மௌனியாக இருக்கின்றோம் நாங்கள் மௌனியாக இருக்கின்றேமே தவிர அது அரசியல் ஏலாத் தன்மையன்ற கருத்தல்ல.

இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் வேறு எந்த இனத்தினதும் மார்க்க விடயங்களில் கை வைத்ததும் கிடையாது. எந்த இனத்திற்கு எதிராவும், ஆயுதங்கள் எந்தி போராட்டம் நடத்தவுமில்லை. இஸ்லாம் மாரக்க போதித்துள்ள சாந்தி, சமாதானம், இன ஐக்கியம், நாட்டின் இறைமை, மக்களின் சம உரிமை என்பவற்றினைக் கடைப்பிடித்தே முஸ்லிம் சமூகம் இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்பது சகலரும் அறிந்த விடயம்.
ஆனால் முஸ்லிம்களின் எந்த விடயத்தினையும் அறியாத இவர்கள் பொது பலசேனா எனும் அமைப்பை தொடங்கிக் கொண்டு முஸ்லிம்களின் மார்க்க விடயங்களைப் பற்றிக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
(லோகதக்சன்)