Published On: Wednesday, March 20, 2013
யானைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்ககோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெலிக்காகண்டி பிரதேச மக்கள் யானைகளின் தாக்குதலிலிருந்து தம்மை பாதுகாக்கக்கோரி மாவட்ட செயலக இன்று புதன்கிழமை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1990 ஆண்டு தொடக்கம் யுத்த சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியாக இடம்பெயர்வுகளைச் சந்தித்து வந்த இந்த பிரதேச மக்கள் இறுதியாக 2007 ஆண்டு கிழக்கு மீட்பு நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட போதும் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த கிராமத்தில் சுமார் 57 குடும்பங்கள் வரை வசிக்கின்ற போதிலும் யானைகள் நாள்தோறும் புகுந்து அட்டகாசம் செய்து வருவதுடன் கிராம வாசிகள் 5 பேரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி பல வீடுகளை சேதமடையச் செய்ததுடன் விவசாய செய்கையையும் நாசம் செய்துள்ளன. இதன் காரணமாக அச்சமான சூழ்நிலையிலேயே தமது அன்றாட வாழ்கையைக் கொண்டு செல்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “22 ஆண்டுகளாக இந்த பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றோம் உடன் நடவடிக்கையெடுக்க ஆவணை செய்யுங்கள்” “கிழக்கின் உதயம் எமக்கு எங்கே” “யுத்தத்தின் வடுக்கள் எமது கிராமத்தில் எப்போ மறையும்”, விவசாய செய்கைக்கு உகந்த வகையில் நீர்ப்பாசன வாய்க் கால்களை திருத்தி தாருங்கள்”, முன்னோர் காலம் தொட்டு இன்றுவரை மின்வார வசதி கிடையாது எப்போ எமது கிராமத்தின் இருள் மறையும்”, போக்குவரத்திற்கான வீதி சீரில்லை யானைப் தொல்லை”, அரசின் அபிவிருத்தித் திட்டத்தில் எங்கள் கிராமம் உள்வாங்கப்படுமா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சால்ஸ், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் குறித்த பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து குறிப்பிட்ட துறைசார் அதிகாரிகளிடம் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
யானைகளிலிருந்து பாதுகாக்க மின்வேலி அமைத்து அதனைப் பராமரிக்கும் பொறுப்பினை ஊர்காவல் படையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்படும்.
தேசத்துக்கு மகுடம் மற்றும் இந்திய வீடமைப்புத் திட்டம் மூலம் வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தெரிவித்தார்.
(குகதர்சன்)