Published On: Thursday, March 28, 2013
இராணுவத்தினர் மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக பரவிய வதந்தி
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை பொதுமக்களிடத்தில் பரவிய ஒரு பொய்யான வதந்தியால் பொற்றோர்கள் பாடசாலைகளை நோக்கி படையெடுத்தனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை அம்பாறையில் நடைபெரும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியினை காண்பிப்பதற்காக அழைத்துச் செல்லயிருப்பதாகயும், அம்மாணவர்களை அழைத்துச்செல்ல இலங்கை இரானுவத்தினர் பஸ்ஸில் வந்துள்ளது என ஒரு பொய்யான வதந்தி ஒன்றினால் இப்பிரதேச பெற்றோர்கள் பெரும் குழப்பமடைந்து பாடசாலைக்குச் சென்றுள்ள தம் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துவர பாடசாலைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் பாடசாலைகளுக்கு முன்னால் பெரும் குழப்ப நிலையும், வாகனநெரிசலும் ஏற்பட்டது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியைச் பார்ப்பதற்காகவா எங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைத்தோம். கல்வியை கற்பதற்காக வந்த எங்களின் பிள்ளைகளை இராணுவத்தின் உதவியுடன் பலாத்காரமாக பஸ்களில் ஏற்றிச் செல்ல எவ்வாறு நீங்கள் முடிவு எடுப்பீர்கள் என இவ்வாறு பல கேள்விகளை எழுப்பிய பெற்றோர்கள் ஆரியர்களிடம் முரன்பாடுகளுக்கு மத்தியில் பாடசாலையை உடனடியாக கலைக்கவும். அவ்வாறு பாடசாலையை கலைக்காவிட்டால் எங்களின் பிள்ளைகளை எங்களுடன் அனுப்பி வைக்கவும். என்று பாடசாலைகளுக்கு முன் நின்று சத்தமிட்டனர்.
தங்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைக்கு படையெடுத்து வந்த பெற்றோர்கள் ஆத்திரத்துடன் பல கேள்விகளை கேட்டு சத்தமிட்டவர்களிடம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், சமூக நலன் விரும்பிகள், பாடசாலை நிர்வாகம் போன்றோர்கள் எவ்வித அடிப்படையுமற்ற ஒரு பொய்யான வதந்திச் செய்தியாகும் அதை நீங்கள் நம்பவேண்டாம் எனவும் அப்படித்தான் உங்களின் பிள்ளைகளை கூட்டிச் செல்வதாக இருந்தால் பெற்றோர்களாகிய உங்களிடம் அறிவித்தல் வழங்கி அனுமதியை பெற்ற பின்னர்தான் அழைத்துச் செல்வோம் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும் என பெற்றோர்களுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை கூட்டிச் செல்வதிலேயே குறியாக நின்றனர்.
சகல பாடசாலை அதிபர்களும் பாடசாலை கலைத்து மாணவர்களை பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர். இவ்வாறு ஏற்பட்ட வதந்தியால் மாணவர்களின் இன்றைய பாடசாலை கற்றல் செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இராணு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறினர். ஆனால் இன்று நடைபெற்ற இந்த விடையம் முற்றிலும் மக்களைக் குழப்பும் முயற்சியில் ஒரு வதந்தி பரப்பி விடப்பட்டுள்ளன. இச்செய்தி பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு இராணுவ மேலதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
யாராக இருப்பினும் எந்தச் செய்தி கிடைத்தாலும் அதனை தீர விசாரித்த பின்னர்தான் குறிப்பிட்ட விடயத்தில் கவனம் செலுத்தி முடிவு எடுக்க முனைய வேண்டும். இன்று ஏற்பட்ட ஒரு பொய்யான வதந்தியினால் எமது மாணவச் செல்வங்களின் ஒருநாள் பாடசாலை கல்வி கற்றல் நடவடிக்கைகள் யாவும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
(எம்.பைஷல் இஸ்மாயில்)