Published On: Thursday, April 11, 2013
அலுகோசு

வீட்டு மோட்டு வளையில்
காகம் கரைந்தாலும்
காரணமில்லாமல் கலவரப்படுகிற
காத்து ராசிக்காரனவன்
ஆத்துக்கு குளிக்கச் சென்று
ஆழத்துக்கு போகாமல்
ஆத்தங்கரையில நின்று
வாளியால் தண்ணி அள்ளி வாக்கிற
பயந்த உசிருக்காரனவன்
கொழும்புக்கு வந்த புதிதில்
புறக்கோட்டை அங்காடித் தெருவில்
குடுக்காரன் உறுக்கியதால்
'பெல்ட்டுக்கு' நூறு ரூபாவும்
அதில் ஒவ்வொரு ஓட்டைக்கும்
இரு நூறு ரூபா விகிதம் செலுத்திய
பச்சைத் தண்ணியவன்
ஊருக்குள்ள ஊரடங்குச் சட்டமென்றால்
ஊருக்கு வெளியே சென்று
ஊர் நிலவரம் கேட்கும்
நடந்தால் புல்லும் சாகாத
இளகிய மனசுக்காரனவன்
மைய்யித்து வீடொன்றில்
மீஸான் கட்டை, மஞ்சுப்பொட்டி,சந்தூக்கு
சகலதையும் கண்டு சதிரம் நடுங்குகிற
மௌத்துக்கு பயந்தவனவன்
தம்பிக்கு வயசு முப்பத்தியொன்று ஆகியதால்
தொழிலொன்று கட்டாயம் தேவையாகியதால்
எதிர்காலத்தை நினைத்து வெம்பியே தம்பி
'அப்ளிக்கேசன்' போட்டு விட்டான் அலுகோசுக்கு
பயந்த சீவன்காரன் நம்ம அலுகோசு
மரண தண்டனை கைதிக்கு
தூக்குப் போடுகிற தொழிலை
துணிவுடன் பெற்றுக்கொண்டு
வெலிக்கடைக்கு 'ரெயினிங்' சென்று
அங்கே வெளுத்து வாங்குகிறார்.
-எஸ்.ஜனூஸ்-