Published On: Sunday, April 28, 2013
இளமைக்காலம்

தாழை மரத்தின் கீழே தவழ்ந்து திரிந்த காலம்
கோழைத்தனம் மறந்து குதுகலித்த இளமைக்காலம்
வெட்டு வாய்க்கால் முகத்துவாரத்தில்
வெற்று மேனியுடன் குளித்த நாட்கள்
கட்டுக்கடங்க காளையென முட்டி முட்டி மோதி
அலைகடலில் குதித்த காலம்
கிண்ணம் பழம் பறிப்பதற்காய்
கிஞ்சித்தேனும் அச்சமின்றி
எண்ணியபடி பெரும் கந்து
ஏறிக்குதித்தது இன்னும் நினைவிருக்கு
பச்சோலை பாம்பு படுத்திருக்கும்
பருந்து பூரான் நிறைந்திருக்கும்
உயிரை துச்சமென மதித்து
துணிந்தே குரங்கென தாவியதுண்டு
ஆற்றினுள்ளே நீந்திச் சுழியோடி
அடித்துப் பிடித்து விளையாடி
வேற்றுமைகள் யாவும் மறந்தே
ஓருமையாய் ஓடித்திரிந்த காலம்
பிட்டும் தேங்காய்ப் பூவுமாய்
பிள்ளைகள் நிசாரும் பாலாவும்
கொட்டும் மழையிலும் கூடி
வட்டக் களரியாய் நின்று
வாலிபத்தை சுவைத்த காலம்
வாப்பாவுடன் ஆற்றுக்கு சென்று
வள்ளல் இலைக்கறி நோண்டி
தரமான விரால் பிடித்து வந்து
கலாதியாய் சாப்பிட்ட அலாதியான நாட்கள்
இன்றைய சந்ததியை பார்த்து
இதயம் வெதும்பி அழுகின்றேன்
அன்று நாம் பெற்ற
அலாதியான அனுபவங்கள்
இவர்களுக்கில்லையென்று
எட்டு வயதே நிறையாத
என்னருமைக் கடைக்குட்டியும்
எண்ணிரண்டு கிலோப்பொதியை
எடுத்தே செல்கின்றான் பள்ளிக்கு
பள்ளி விட்டு வீடு வந்தால்
பரிவுடன் பெற்றோருடன் பேச நேரமில்லை
மீண்டும் போகனுமாம் டியூசனுக்கு
மீட்சியில்லா படிப்பு இது
புலமைப் பரீட்சையில் தேறனுமாம்
புதினமாய் இருக்கின்றதெனக்கு
இளமைக்காலத்தை பொதி சுமந்தே
இப்படிக் கழிப்பதை பார்ப்பதற்கு
வீதியில் தூத்தி அடித்த காலம் மாறி
வீட்டு முற்றத்தில் கிரிக்கட் இன்று
ஆதியில் இருந்தே பழக்கம் தேய்ந்து
அனைத்தும் மாறி விட்டதுவே.
-கவிஞர். தம்பிலெப்பை இஸ்மாயில்-