Published On: Monday, April 01, 2013
தூக்கில் தொங்கிய நிலையில் விசேட தேவையுடைய சிறுமியின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனைப் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் விசேட தேவையுடைய சிறுமியின் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி - காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய ஆதம்லெப்பை பர்மிலா என்ற சிறுமியின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய சிறுமி நேற்று மாலை 4 மணியளவில் குளிப்பதற்குச் செல்வதாக கூறிச் சென்ற இவர் சிறிது நேரத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து வாழைச்சேனைப் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் வாழைச்சேனை அரச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பணிப் பெண்ணுக்கான பயிற்சியை முடிக்கும் பொருட்டு கொழும்பு சென்ற நிலையில் குறித்த சிறுமி தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(குகதர்சன்)