எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, April 20, 2013

வெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி

Print Friendly and PDF


ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது என சமூகநிலை குறித்து வெதும்புகின்றார் இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத்துறையில் பிரபல மூத்த பெண் அறிவிப்பாளினியான நாகபூசனி.


வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர் என்ற பன்முகங்களைக்கொண்ட இவர் சிறந்த நடிகையாகவும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். அண்மையில் அவரை சந்தித்தபோது எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை துருவம் வாசகர்களுக்காக‌  தருகின்றோம்.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்தினை எமது துருவத்தின் வாசகர்களுக்கு கூறுங்களேன்? 

பதில்: நான் நாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம்வரை கற்று யாழ். ப்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் பூர்த்துசெய்துவிட்டு தற்போது  நீங்கள் நன்கறிந்த இலங்கை வானொலி தென்றலின் நிரந்தர அறிவிப்பாளராகவும் வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி: அறிவிப்புத்துறையில் பெற்றுக்கொண்ட‌ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில்: அனுபவம் நமக்கு சிறந்த ஆசான். உலகம் என்கின்ற கல்விக்கூடத்தில் மரணம்வரை கற்கவேண்டியவை. கற்கவேண்டிய மனித மனங்கள் ஏராளம். அறிவிப்புத்துறை என்கின்ற சாகரத்தில் நீந்திக் கால்பதித்த பின்னும் இந்த கலைக்கூடத்தினை கற்பதே ஒரு புதிய அநுபவமாகத்தான் இருக்கின்றது. மிகத்தொலைவிலிருந்து நான் நேசித்த வானொலி, நான் ரசித்த குரல்கள் அருகே நெருங்கியதும் ஏற்பட்ட பிரமிப்பு, உலக அறிவிப்பாளர்களுக்கே அன்னையாய் திகழும் தாய் வானொலியின் துறைசார் ஜாம்பவான்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு, செய்தி என்பது எப்படி, அறிவிப்பு விளம்பரம் என்பன பற்றியெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டு பட்டைதீட்டப்பட்டு ஒவ்வொரு படியாக முன்னேறும்போது வரவேற்பும் உண்டு எதிர்ப்பும் உண்டு. இவையெல்லாமே இன்றுவரை தொடரும் எனதான அற்புதமான அனுபவங்களே.


கேள்வி: உங்களுடைய அறிவிப்புத்துறை சார்ந்த பணிகள் பற்றி கூறமுடியுமா?

பதில்: இலங்கை வானொலி கண்டிச் சேவையில் அறிவிப்பாளராகவும் கல்விச் சேவையில் தயாரிப்பாளராகவும் அதேவேளை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றேன். பல விளம்பரங்களில் தோன்றியுள்ள நான் மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றேன். ஊடகம் சம்பந்தமான கற்கை நெறிகளுக்கு அவ்வப்போது விரிவுரையாற்றச் செல்வதுமுண்டு. கையடக்கத்தொலைபேசி இணைப்பில் (டயலொக்) உங்களுக்கு செய்தியும் கூறியிருக்கின்றேன்.

கேள்வி: இன்றுவரை இத்துறையில் நிலைத்து நிற்கும் வெற்றியின் ர‌கசியம் பற்றி?

பதில்: இந்த இரகசியம் வெற்றியாளராய் என்னை நீங்கள் குறிப்பிடக் காரணமான ரசிகர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது. வெற்றி என்பது முதலிடமென்பதும் நிரந்தரமானதல்ல என்று கூறப்பட்டாலும் சில மனிதர்கள் எப்போதும் வெற்றியாளராக முதலிடத்தில் திகழக்காரணம் அவர்களின் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

கேள்வி: நீங்கள் கடந்துவந்த துறைசார்ந்த பாதையில் கசப்பான அல்லது மறக்கமுடியாத சம்பவங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பதில்: கசப்பான மருந்துகள்தானே கடுமையான நோய்களை குணப்படுத்தும். இனிப்பை பகிர்ந்தளித்தால் மகிழ்ச்சி. எனவே, இனிமைதராத கசப்பை பகிர்ந்துகொள்ள வேண்டாமே.


கேள்வி: சினிமா தவிர்ந்த கலை, இலக்கியம் சார்ந்த நம்நாட்டு படைப்புக்களுடன் கூடிய நிகழ்ச்சிகளுக்கு நேயர்களிடையே எப்படியான வரவேற்பும் பங்களிப்பும் காணப்படுகின்றது?

பதில்: இப்போதெல்லாம் பொழுதுபோக்கு அம்சங்களே அதிகம் வரவேற்கப்படுகின்றன என்ற கூற்றை பொய்ப்பிக்கும்படி நேயர்களின் பங்களிப்பு நல்ல பல நிகழ்ச்சிக்கு கிடைக்காமலில்லை. உதாரணமாக 'அந்திநேரச் சிந்துகள்' என பல வருடங்களுக்கு முதல் நான் படைத்த இலக்கிய நிகழ்ச்சிக்கு இன்று தமிழமுதம் என்ற பெயரில் நேயர்களின் பங்களிப்போடு ஒலிபரப்பாகின்றது. இதன்மூலம் இலக்கியதேடல்களில் ஈடுபடுகின்றார்கள் என் அன்பு நேயர்கள் என கூறமுடியும்.

தேடித்தேடி வாசிக்க வேண்டும் அதிலே சிறந்தவற்றை பொறுக்கியெடுத்து தமிழன்னைக்கு சூட்டவேண்டுமென்று இலக்கிய உலகுக்கு தம் பங்களிப்பை வழங்குகின்றார்கள். செவிமடுத்தல், கற்றல், படைத்தல், தேடல் என நேயர்களது பயணம் ஆரோக்கியமானதாய் அமைகின்றது. உலகம் இயந்திரமயமானாலும் மேலைத்தேய நாகரிகம் குழிபறித்துக் கொண்டிருந்தாலும் இதயத்தின் ஈரமும் பண்பாட்டின் பக்குவமும் விழுமியத்தினை விழுந்துவிடாமல் காக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் கலை இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் இன்றும் கரகோஷத்தைப் பெறுகின்றன.

கேள்வி: அறிவிப்புடன் எழுத்துத்துறையிலும் உங்களுடைய திறமை பதிக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: சின்னஞ்சிறு வயதுமுதல் வாசிப்பில் நிறைந்த ஆர்வம். அம்புலிமாமாவில் தொடங்கியது விபரம் புரிந்த வயதில் அதுவே கவிதை கதை எழுத அடித்தளமிட்டிருக்கலாம். பாடசாலைக் காலத்தில் நானே எழுதி நான் மட்டும் சுவைத்து யார் கண்ணிலும் பட்டுவிடாமல் அழித்தொழித்தது பசுமையாய் இன்னும் நினைவில் நிற்கின்றது. பாடசாலைக்காலம் முடிய எழுத்தில் திரும்பிய கவனம் பத்திரிகை, சஞ்சிகை, வானொலி என்பவற்றுக்கு கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற இலக்கியநயமாக வலம்வந்தது. அதன் தொகுப்பாக 'நெற்றிக்கண்' என்ற எனது கவிதைத்தொகுப்பு பிரசவமானது.


கேள்வி: வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இளையவர்களின் வருகையும் வேகமும் துரிதமாக காணப்படும் அதேவேளை குறுகிய காலத்திலேயே அவர்கள் பின்வாங்கிப்போகும் நிலை காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: இளையவரோ, மூத்தவரோ எவராயிருப்பினும் தான்சார்ந்த துறையில் தம்மை வளர்த்துக்கொள்ள தவறிவிட்டால் காணாமல்போய்விட வேண்டியதுதான். நேயர்களால் சிறப்பான ஒருவராக இனம்காணப்படும் பட்சத்தில் ஒரு அறிவிப்பாளனுக்கு நிச்சயமாய் நிரந்தர இடங்கிடைக்கும். வருடக்கணக்கில் துறைசார்ந்திருந்தும் இடம்பிடிக்காதவர்களும் உண்டு வந்தவுடன் தமக்கென தனிமுத்திரை பதித்தவர்களும் உண்டு. பலாத்காரமாய் பாராட்டினை பெற்றுவிட முடியாது. தகைமை திறமை மொழியாற்றல் இருந்தால் வெற்றிநிச்சயம்.

கேள்வி: பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தூண்டுகோலாக, பெண்களிடமும் குறைபாடுகள் இருக்கிறதா அல்லது இதற்கான முழுப்பொறுப்பும் சமூகத்திடம்தான் காணப்படுகின்றதா? இதில் உங்களது நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது?

பதில்: ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல இதற்கும் நாம் இருபக்கங்களுமே காரணம் என்றுதான் கூறவேண்டும். தீ நம்மை தீண்டும்வரை கண்டும் காணாதிருந்துவிட்டு சுட்டவுடன் அலறித்துடிக்கும் நிலையே இயல்பாகிவிட்டது. ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது?

கேள்வி: எதிர்காலத்தில் உங்களுடைய இலட்சியமும் உங்களுக்கு கிடைத்த வெற்றியின் மகுடங்கள் பற்றியும் கூறுங்கள்? 

பதில்: ஒரு இலக்கைவைத்து நான் பயணிக்கவில்லை. இட்டாருக்கு இட்டபடி ஈசன் செயலே என்பது என் நம்பிக்கை. நிறைய கற்கவேண்டும் நான் சார்ந்த துறையில் என்சேவை ஒப்பற்றதாயிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். வெற்றியின் மகுடம் என்பது விருதெனக்கருதினால்,

கலாசார அமைச்சினால் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, கலாசார அமைச்சினால் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது அத்துடன் இன்னும் சில பட்டங்களையும் சொல்லலாம். வெற்றியின் மகுடமென்பது தகைமை என்றும் கருதலாம் என்பதால்,

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அறிவிப்பாளராய் அழைக்கப்பட்டமை, சார்க் மாநாட்டுக்கு ஆரம்ப அறிவிப்பாளராக பங்குகொண்டமை, அணிசேரா நாடுகளின் மாநாட்டு அறிவிப்பாளராக பங்குகொண்டமை, மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் எனக்கு 2ஆம் இடம் கிடைத்ததனையும் குறிப்பிடலாம். இது வெளிநாடொன்றில் கிடைத்த மகுடமென்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கேள்வி: வளர்ந்து வருகின்ற இளைய அறிவிப்பாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் ஆலோசனைகள்?

பதில்: தளம்பாத நிறைகுடமாய் திகழ உங்கள் துறையில் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். எத்துணை உயர்ந்தாலும் தற்பெருமையை துணைக்கு அழைக்காதீர்கள். அவரவர் எண்ணப்படியே அவரவர் ஆகின்றார். எனவே, எண்ணங்கள் உயர்ந்தவையாகட்டும்.

(நேர்காணல்: ராஜ் சுகா)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2