எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, April 23, 2013

பொத்துவில் தனியான கல்வி வலயக் கனவு நிறைவேறுமா?

Print Friendly and PDF


பொத்துவில் பிரதேசத்திற்கு என தனியான கல்வி வலயம் அடுத்தாண்டிலிருந்து உதயமாகிவிடும் என்று அண்மையில் கிழக்கு மகாணத்திலுள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் கிழக்குமாகாண கல்வியமைச்சருடன் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது பேசப்பட்டதாகவும், இதற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை அவர்கள் கடுமையான பிரயத்தனத்தை எடுத்திருந்தார்கள் என்றும், உடனடியாக செயற்படும் வண்ணம் ஒரு உப கல்வி  வலயமாக பொத்துவிலைப் பிரகடனப்படுத்துவதாகவும் அப்போது அமைச்சர்கள் அறிவித்திருந்தனர். இந்நிகழ்வுகளில் மாகாணக் கல்வியமைச்சின் அதிகாரிகள், பொத்துவில் பிரதேச கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள், இவ்விடயத்தில் ஆர்வமாக இருக்கின்ற பொதுநலவாதிகள் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அதிகாரி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

பொத்துவில் பிரதேசம் அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட ஒரு கோட்டக்கல்விப் பிரிவாகவே தற்போது செயற்படுகின்றது. அக்கரைப்பற்று வலயத்தில் இருக்கின்ற இக்கோட்டத்தில் தற்போது 20பாடசாலைகள் காணப்படுகின்றன. அக்கரைப்பற்று நகரிலிருந்து பொத்துவிலுக்குச் செல்லவேண்டிய தூரம் சுமார் 50 கிலோமீற்றருக்கும் மேலாகும். இவ்வளவு தூரத்தையுடைய ஒருபிரதேசத்திலிருந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும், ஏனைய அதிபர் மற்றும் ஆசிரியர்களினதும் கல்விப்பிரச்சினைகளுக்கும் 50கிலோமீற்றர் தூரத்திலிருந்து அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அந்தப்பிரதேசத்துப் பாடசாலைகளின் கல்வியியலாளர்கள் காணப்படுகின்றமை இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே இந்தப் பரிதாபகரமான நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அதாவது கல்முனை கல்வி மாவட்டத்தில் கல்முனை, வலயக் கல்வி அலுவலகமாக இருந்த காலத்தில் பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை ஆகியன கோட்டங்களாக இருந்தபோது இக்கோட்ட கல்வி அலுவலகங்கள் பல்வேறுபட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தன. இக்காலப்பகுதியில் ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைகள், பாடசாலையின் நிருவாகப் பிரச்சினைகள் போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை இந்தக் கோட்ட கல்வி அலுவலகங்களே நிறைவேற்றிவந்தன. ஆனால் வலயக் கல்வி அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை போன்ற வலயங்கள் உருவாக்கப்பட்டபோது திருக்கோவில் எனும் தமிழ்ப்பிரதேசப்பாடசாலைகள் அனைத்தும் அக்கரைப்பற்று வலயத்துடன் இணைக்கப்பட்டன.

பின்னர் இனரீதியான பிரிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டபோது இந்தப் பொத்துவில் பிரதேசத்துப் பாடசாலைகள் அனைத்தும் குறிப்பாக பொத்துவில் கோட்டம் அக்கரைப்பற்று வலயத்துடன் இணைக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேசத்தையும் தாண்டி செல்லவேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் இக்கோட்டத்தை ஒரு தனியான வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு பல அரசியல் தலைவர்களிடம் எடுத்துக்கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டுவந்த நிலையில்தான் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை அவர்கள் உதவியிருக்கின்றார்கள். இதற்கு அமைச்சருக்கு இந்தப்பிரதேசத்து மக்கள் நன்றியுடன் விசுவாசிப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஏற்கனவே அதாவது கடந்த 2000ஆம் ஆண்டில் பொத்துவில் கோட்டமானது ஒரு உப வலயமாக இருந்து செயற்பட்டிருக்கின்றது என்கிற ஒரு செய்தியும் எமது பார்வையில் விழுந்தது.

அதாவது அப்போது பொத்துவில் கோட்டத்திற்கான கல்வியதிகாரியாக இருந்தவரும், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியுமான மர்ஹ_ம் கவிவானர் எம்.எச். அப்துல் அஸீஸ் என்பவரின் விடாமுயற்சியின் காரணமாக இக்கோட்ட கல்வியலுவலகத்தில் வலயக் கல்வி அலுவலகத்தின் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிழக்கு மாகாணத்தின் கல்வியமைச்சின் செயலாளராக இருந்த திருவாளர் சுந்தரம் திவகலாலா என்பவர் கிழக்கு மாகாணத்தில் இதுபோன்ற தூரப்பிரதேசப் பாடசாலைகள் அமைந்துள்ள தெஹியத்தக் கண்டிய, கோமரன் கடவல போன்ற பிரதேசக் கோட்டக் கல்வி அலுவலகங்களையும் இதுபோன்ற உப கல்வி வலயமாக அமைத்து இயங்குவதற்கு முடிவாக்கினார். இதன் காரணமாக இந்தப் பிரதேசத்து ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு இதற்கான நடடிவடிக்கையை மேற்கொண்டிருந்தமை பாராட்டத்தக்கது என்று கல்விப்புலத்திலுள்ளோர் நன்றிகூறினர். அது சிறுகாலத்தின் பின்னர் முடக்கப்பட்டுவிட்டது.

அப்போது இதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொத்துவில் பெருமக்கள் பலர் உண்டு. அந்தவகையில் பிஏ.காதர், எம்.எல்.எம்.காதர் போன்றோரும் நினைவுகூறத்தக்கவர்கள். ஆனால் பிறகு இனரீதியாக வலயங்கள் பிரிக்கப்பட்டபோது பொத்துவில் காரியாலயம் முழுமையாக அக்கரைப்பற்று வலயத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது பொத்துவிலையும் தனியான கல்வி வலயமாகப் பிரிக்குமாறு எடுத்துக்கூறியபோது அது சாத்தியப்படாமலே போய்விட்டது. அக்காலத்தில் நாட்டில் யுத்தம் நடைபெற்றிருந்த காலப்பகுதியில் சியம்பலாண்டுவ பாதைவழியாக அம்பாரைக்கு வந்து அங்கிருந்து அக்கரைப்பற்றுக்கு வந்து அலுவல்கள் முடித்துவிட்டு இரண்டு நாட்களுக்குப்பிறகு பொத்துவிலுக்குத் திரும்பிய வரலாறுகளும் உண்டு.

இவ்வாறு பல கஷ்டங்களுக்கும் மத்தியில் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள ஆசிரியர்கள், அதிபர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள் படும் துன்பங்கள், வேதனைகள், அவலங்களுக்கு முடிவுகட்டும் முகமாகவே கடந்த வருடத்தில் மத்திய கல்வியமைச்சர் பொத்துவிலுக்குச் வருகை தந்தபோது இது சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கி விரைவில் தனியான கல்வி வலயம் அமைப்பதற்கு எத்தகைய தடையும் இல்லை என்றும் விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறிச்சென்றார். நடைபெறவில்லை. தற்போது இதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. உப கல்வி வலயமாக பரிணமித்துள்ள இவ்வலத்தின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளையாதவாறு அடுத்தாண்டிருந்து முழுமையான கல்வி; வலயமாக பொத்துவில் வலயம் அமையுமாக இருந்தால் அதற்கான முழு நன்றியும் அமைச்சரான எம்.எஸ். உதுமாலெவ்வைக்கும், அவர்சார்ந்திருந்த கட்சிக்கும் கட்டாயம் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உண்மையில் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைகின்றபோது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வாக இவ்வலயம் காணப்படும் என்கின்றனர் கல்விப்பகுதியிலுள்ளோர். அதாவது பொத்துவில் பிரதேசப் பாடசாலைகளைப் பொறுத்தளவில் மிகவும் மோசமான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இது தனியான வலயமாக அமைக்கப்படுகின்றபோது அங்கே ஆசிரியர்கள் நிறைவாக பெற்றுக் கொள்வதற்கு வழியேற்படும். அத்துடன் நிருவாக வேலைகளை மேற்கொள்வதற்கும் அக்கரைப்பற்றிலிருந்து அதிகாரிகள் வந்து போகின்ற பிரச்சினை, செலவுகள், காலதாமதம் போன்றன இல்லாமலாக்கப்பட்டு தனியான ஒரு பிரிவாக இயங்குவதால் அப்பிரதேச கல்வியியலாளர்களினது சேவை நேரடியாக பிரயோகிக்கப்படுகின்ற ஒரு நிலமை தோற்றம் பெறுகின்றது என்பதும் முக்கிய அம்சமங்களாகும்.

பொத்துவில் பிரசேதம் ஒரு பரந்த பிரதேசமாக இருக்கின்றது. அங்குள்ள பல பாடசாலைகள் அப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. இதனை மேற்பார்வை செய்கின்ற அதிகாரிகள் சென்று வரவே காலதாமம் ஏற்படுகின்றது. அதிலும் அக்கரைப்பற்றிலிருந்து ஒருதடவை வந்து செல்வதாக இருந்தால் பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படுகின்ற ஒருநிலைமை காணப்படுவதால் முறையான கல்விச் செயற்பாடுகளை பார்வையிடுவதும், ஆசிரியர்களது பற்றாக்குறையாக காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலும் பல்வேறு இழுபறிகள் ஏற்பட்டுள்ளன. அண்மையில்கூட பொத்துவில் பாடசாலை ஒன்றில் ஆசிரியர்கள் குறைவாக காணப்படுகின்ற ஒருபிரச்சினையால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இதன்காரணமாக ஒருவாரத்திற்கும் மேலாக பாடசாலை இயங்காத ஒருநிலை ஏற்பட்டது. இவ்வாறு ஆசிரியர்கள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிலும் ஒரு மந்தநிலை காணப்படுகின்றது. இருந்தாலும் பெற்றோர்கள், ஊர்; ஆசிரியர்களின் விடாமுயற்சியின் பயனாக அடைவு மட்டங்களில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எது எப்படியாக இருந்தாலும் பொத்துவிலுக்கான ஒரு தனியான கல்விப் பகுதி அமையப்போகின்றது. இதன் ஊடாக பொத்துவில் பிரதேசப் பாடசாலைகளும், அதிபர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் இதற்கு முன்னர் இருந்த நிலைமை முழுமையாக மாற்றம் பெறுமா என்பதும் மிகப்பெரிய சவால் என்கின்றனர் சில அதிபர்கள். பொத்துவில் பிரதேசத்தில் முழுமையான ஆளணியினர் இல்லாத நிலையில் மீண்டும் அதே பல்லவியைப் இந்த புதிய வலயம் பாடுமாக இருந்தால் அக்கரைப்பற்று வலயத்திடம் கேட்கின்ற ஒருநிலைமை மாறி மாகாணக் கல்வி அமைச்சிடம் கேட்கின்ற ஒரு நிலைமை தோற்றம் பெறும். அக்கரைப்பற்று வலயத்தினர் அவர்களிடமிருந்து பெற்ற உதவியை மாகாணத்திடம் பெறவேண்டிய நிலை ஏற்படும். இது முன்னரைவிட அதிக காலவீண்விரயம் ஏற்படுமாக இருந்தால் அக்கரைப்பற்று வலயத்துடன் இணைந்திருப்பது மேல் என்கிற பேச்சுக்களும் எழாமலில்லை. இருந்தாலும் ஆளணியினரைப் பெற்றுக் கொள்வதிலும், அவர்களை அங்கு தங்க வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் பொத்துவில் கல்வி வலயத்திற்கு ஏற்படலாம் என்கின்றனர் நோக்கர்கள்.

சரி விடயத்திற்கு வருவோம். அதிகமான பாடசாலைகள் தூரத்தில் காணப்படுகின்றன. பொத்துவிலைப் பொறுத்தளவில் கிழக்கே கடலும், மேற்கே வயல்நிலங்களும், காடுகளினாலும் சூழப்பட்டுள்ள ஒரு இயற்கை சூழலில் உள்ள ஒரு கிராமமாகும். தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் எனப் பல்லின மக்கள் வாழும் இங்கு உல்லாசபுரிக்கு பெயர்போன அறுகம்பே எனப்படும் உல்லைப் பிரதேசம் வெள்ளையர்களால்(வெளிநாட்டினரால்) நிறைந்து காணப்படும் ஒரு சொர்க்கபுரியும் உண்டு. குடாகல், அழகிய மணல்மேடு, வாடிவீடுகள், குமன எனப்படும் விலங்குகள் சரணாலயம், இயற்கையான காடும், உகந்த முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பாதையாகவும், கும்புக்கன் ஓயாவை அண்மித்தும் இந்த பொத்துவில் பிரதேசம் காணப்படுகின்றது.

முழுமையாக விவசாயம், கடல் போன்ற தொழில்களை நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வில் வெளிநாட்டு உல்லாசபுரியாக அறுகம்பே மாறியபோது மக்களும் அதற்கேற்றவாறு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் மக்;களில் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகள்தான் இங்கு கற்கின்றனர். இவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த தனியாக கல்வி வலயம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தி மாணவர்களின் கற்றல் சிறப்பிக்குமாக இருந்தால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சரியான தாக்கம் ஏற்படாது மாணவர்களின் கற்றலில் பின்னடைவான ஒருபோக்கு ஏற்படுமாக இருந்தால் அது அனைவரையும் பாதிக்கவே செய்யும் என்பதையும் பொறுப்புடையோர் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே, தற்போது உடன் செயற்படும் வண்ணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொத்துவில் உப கல்வி வலயத்தின் ஆளணி நிரப்பட்டு அடுத்;தாண்டுக்கு முன்னராக தனியான கல்வி வலயமாக பூரணத்துவமுடைய ஒரு இருப்பிடத்தில் அமையுமாக இருந்தால் அதனைக் கண்டு பொத்துவில் மக்கள் நிச்சயம் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள். அதற்கான வேலைத் திட்டங்களை அரசியல் வாதிகள் முன்னெடுக்க வேண்டும். வெறுமனே கல்வி வலயம் என்று எழுத்தில் கொடுத்துவிட்டால் அதுநிறைவேறாது. அதற்கான முழுத்திட்டமும் சரியான முறையில் அமுல்படுத்துவதற்கு முழுமையான அரசியல் பலம்தேவை. அந்தப்பலம் தற்போது அமைச்சர் உதுமாலெவ்வையிடம் இருப்பதாகவே பொத்துவில் மக்கள் நம்புகின்றனர். பொத்துவிலை நாடுகின்ற பல அரசியல் வாதிகள் உதட்டில் ஒன்றும் செயலில் ஒன்றுமாகவே நடாத்திக் காட்டினார்கள். இதற்கு வித்தியாசமான ஒரு அரசியல் வாதியாக அமைச்சர் உதுமாலெவ்வை காணப்படுகின்றார்.

இவரின் ஊடாகப் பெற்றுக் கொண்ட விடயங்களை சரியான முறையில் முழுமையாகப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் அமைச்சரின் கடப்பாடாகும். இது பொத்துவில் பிரதேசத்து மக்களின் மனநிறைவைத் தருகின்ற ஒருவிடயமாகும். கடமையைக் கண்ணியமாக நினைக்கும் உள்ளங்களுக்கு அறிஞர் கிளாட்ஸ்டோன்; “கடமை என்ற சக்தி காலையில் நம்முடன் எழுந்து இரவில் நம்முடன் ஓய்வெடுக்கச் செல்கிறது. அது நம்முடைய அறிவின் செயலில் பிணைந்து கிடக்கிறது. நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நிழல் போல் நம்மைப் பின்பற்றுகின்றது” என்று கூறியுள்ளார். இதன் பிரகாரம் கடமை அறிவின் செயலுடன் பின்ணிப் பிணைந்துள்ளது எனபதற்கு ஒப்ப இச்செயல் எதிர்கால நற்பிரஜைகளின் நல்வாழ்வுக்கான ஒரு புதிய அத்தியாமாக பொத்துவில் கல்வி வலயம் உருவெடுக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாகும்.

(கழுகுப் பார்வை)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2