Published On: Friday, April 19, 2013
இலங்கையில் அல்கைதா இயக்கங்கள் இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் அல்கைதா இயக்கத்தின் செயற்பாடுகள் எதுவும் இருப்பதாக அரசாங்கம் கருதவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். வியாழனன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் அல்கைதா இயக்கத்தின் செயற்பாடுகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு எதனையும் அறிவிக்கவில்லை.
இச் செய்தி வெளியானவுடன் இலங்கை வெளிவிவாகர அமைச்சு அமெரிக்காவைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியது. இருப்பினும் இதுவரை அமெரிக்காவிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் அல்கைதா மற்றும் ஜிஹாத் குழுக்களின் நடமாட்டங்கள் இருப்பதாக அமெரிக்க இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.