Published On: Tuesday, April 09, 2013
ஞானசார தேரர் அமெரிக்கா விஜயம்: பொதுபல சேனாவுக்கு ஒருமாதம் விடுமுறை
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு பயணித்துள்ளது. இவர்கள் நேற்றிரவு சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அமெரிக்கா செல்லும் இவர்கள் அங்கு ஒருமாதம் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அரசசார்பற்ற நிறுவனமொன்றில் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பயிற்சிப்பட்டறையில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பர். அத்துடன் பொதுபல சேனாவின் சர்வதேச செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்துவெளியிடுகையில், அமைப்பின் செயற்பாடுகள் ஒருமாதத்துக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை ஊடகங்களில் வெளியிட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் எதிர்வரும் காலங்களில் தனது பாதையை மாற்றி, பொதுபல சேனாவுக்கு பக்கபலமாக இருக்கும் ஒரு அரசியல்வாதியின் வழிகாட்டலில் புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(முஹம்மட் பிறவ்ஸ்)